சென்னை அரும்பாக்கத்தில் கூவம் நதிக்கரையோரம் கட்டப்பட்டிருந்த 93 வீடுகள் ஓரிரு தினங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. அவர்களில் 21 குடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்படாததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நமது ஏபிபி நாடு இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “சமூக வலைதளங்களில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் குடிசைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர் என்ற தகவல் பரவியது. நான் அப்போது டெல்லியில் இருந்தேன். இன்று(நேற்று) முற்பகல் அப்பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்தேன். கூவம் நதியின் ஓரத்தில் மக்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறினார்கள்.


அங்கிருந்த சுமார் 30 பெண்கள் என்னிடம் அங்கு நடந்த விவரத்தை முழுமையாக விளக்கினர். அரசு அனைவருக்கும் மாற்று இடம் தருகிறது. நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், 21 குடும்பங்கள் நாங்கள் வாடகைக்கு குடியிருப்பவர்கள். எங்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று வேதனையுடன் கூறினார்கள். 93 குடும்பங்கள் மொத்தம். அவர்களில் 21 குடும்பங்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அதுதான் எங்கள் கோரிக்கை என்று கூறினார்கள்.




அந்த 21 குடும்பத்தினரும் அந்த குடிசைகளில் வாடகைக்கு தங்கியுள்ளனர். குடிசையை கட்டியவர்களே வீட்டின் உரிமையாளர்களாக கருதப்படுகிறார்கள். அதனால், அவர்களுக்கு அந்த மாற்று இடம் வழங்கப்படுகிறது. வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு வீடுகள் மறுக்கப்பட்டுள்ளன. இதுதான் அந்த மக்கள் சொன்ன பிரச்சினை. வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.


எங்கே என்று நாங்கள் தேடிப்பார்த்தோம். நான்கைந்து வீடுகளின் முன்னாள் போடப்பட்டிருந்த ஓடுகள், கூரைகள் பிய்த்து எறியப்பட்டுள்ளது. உள்ளே இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இது நீங்கள் செய்ததா? அல்லது அதிகாரிகள் செய்ததா? என்று கேட்டோம். அதிகாரிகள்தான் செய்தார்கள். ஆனால், நாங்கள் மாற்று இடம் ஒதுக்கி பொருட்களை அப்புறப்படுத்திய பிறகுதான் இடிக்க ஒப்புக்கொண்டோம். ஆனால், அவர்கள் இடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. நான்கு வீடுகளுக்கு பிறகு எதையும் இடிக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டனர் என்றனர்.


கடந்த 25 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கும் குடிசைவாழ் மக்களை சென்னைக்கு அப்பால் கொண்டு குடியமர்த்தும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்கார சென்னை என்று சென்னையை அழகுபடுத்தும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால், பல இடங்களில் குடிசைகள் அகற்றப்பட்டன.




குடிசைவாழ் மக்களுடன் பாரிமுனை, ஆயிரம் விளக்கு என்று பல்வேறு பகுதிகளில் அப்போது பல போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். ஆனாலும், அதை தடுக்க முடியவில்லை. அண்மைக்காலமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ளவற்றை நீதிமன்ற உத்தரவின்பேரில் இடித்து வருகிறார்கள். ஆயிரம் விளக்கு பகுதியில் இடித்துக் கொண்டிருந்தபோதே நாங்கள் நேரில் சென்று தடுத்து நிறுத்தினோம். ஆனால், ஒரு வாரம் கழித்து நாங்கள் முழுமையாக இடித்துவிட்டனர்.


குடிசைகளில்கூட உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் என்ற சிக்கல் உள்ளது. வெள்ள காலங்களில் கூட நிவாரணம் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு பொருட்கள் கிடைப்பது இல்லை. நிவாரணம்கூட உரிமையாளர்களுக்குதான் செல்கிறது. சில இடங்களில் உரிமையாளர்கள் செல்வாக்கானவர்களான உள்ளனர். அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்து நான்கு, ஐந்து குடிசைகளை கட்டியுள்ளனர். ஆனால், அவர்கள் நன்றாக செழிப்பான வீட்டில் உள்ளனர்.


குப்பை பொறுக்கும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காகிதம் எடுக்கும் தொழிலாளர்கள் அங்கே குடியிருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், நீதிமன்ற உத்தரவினால் அப்புறப்படுத்தப்படும்போதும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் நிலை பரிதாபமாக மாறுகிறது. அப்படித்தான் இந்த ராதாகிருஷ்ணன் நகரிலும் நிகழ்ந்துள்ளது.


ஆதார்கார்டு, குடும்ப அட்டை இருந்தால்தான் நிவாரணம் வழங்கப்படுகிறது, அவர்களிடம் ஆதார்கார்டு இருந்தால் குடும்ப அட்டை இல்லை. குடும்ப அட்டை இருந்தால் ஆதார்கார்டு இல்லை. அவர்கள் அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே மூன்று அல்லது நான்கு தலைமுறைகளாக அங்கேயே வசிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களுக்கு மாற்று இடம் கிடைக்கிறது எனும்போது ஆறுதல் கிடைக்கிறது.


சென்னை நகரத்திற்கு உள்ளேயே மாற்று இடம் கொடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். ஆனால் ஒக்கியம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் சென்னைக்கு அப்பால் மக்களை அனுப்புவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


இந்த பகுதி மக்களுக்கு புளியந்தோப்பில்தான் வீடு ஒதுக்கியுள்ளதாக கூறினார்கள். சிலருக்கு செம்மஞ்சேரியில் வீடு ஒதுக்கியதாக கூறினார்கள். ஆனால், அங்கு விசாரித்தபோது யாரும் அப்படி கூறவில்லை. 21 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினையாக உள்ளது.




அவர்களுக்காக நான் ரிப்பன் மாளிகைக்கு நேரில் சென்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து 21 குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவரும் திங்கள் கிழமை உரிய பட்டியலுடன் நேரில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். வாடகை வீட்டில் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதியளித்தள்ளார்.


சமூகவலைதளங்களில் பரவிய புகைப்படம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தங்கவேல் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம். உச்சநீதிமன்றத்தில் தனிநபர் தொடுத்த வழக்கில், வீடுகள் இடிக்கப்பட்டபோது மக்கள் அங்கேயே தங்கினர். அந்த படங்களை எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். ஆனால், ராதாகிருஷ்ணன் நகரில் நான்கு வீடுகளில் பொருட்கள் அகற்றப்பட்ட பின்னரே கூரைகள் இடிக்கப்பட்டுள்ளது. நான் கேட்டபோது அதிகாரிகள்தான் இடித்தனர். ஆனால், நாங்கள் பொருட்களை எடுத்தபிறகே இடித்தனர். நாங்களும் உடனிருந்தோம் என்றனர். அந்த பகுதி மக்கள் புளியந்தோப்பிற்கு செல்ல தயாராக உள்ளனர்.


சென்னையில் குடிசை வாழ் மக்கள் பொதுவாக தி.மு.க.விற்கு நீண்டகாலமாக ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்திய பிறகுதான் சென்னையில் பல இடங்களில் தி.மு.க. தோற்றதற்கு காரணம் என்பது என்னுடைய கருத்து. இதனால், வேறு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்கள் தி.மு.க.வை தமிழ் இயக்கம், தமிழர்களுக்கான இயக்கம் என்ற பார்வை கொண்டுள்ளதால் அவர்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.




உதாரணமாக, அமைச்சர் சேகர்பாபு தொகுதியில் வட இந்தியர்களான மார்வாடிகள் வசிக்கும் பகுதியில் பா.ஜ.க. ஓட்டு உயர்ந்தது. அந்த பகுதியில் ராஜஸ்தான், குஜராத் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் யாரும் தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை. குடிசைப்பகுதிகளுக்கு வரும்போது தி.மு.க. வாக்கு உயர்கிறது. அதுதான் வெற்றிக்கு காரணமாக இருந்தது.


சென்னையில் குடிசைவாழ் மக்களை சென்னையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் அப்புறப்படுத்திவிட்டால், இவர்களுக்கு வாக்களிக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். அங்குள்ளவர்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என்றால், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அதிகாரிகளிடம் தற்போது கூறியுள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேறாவிட்டால் முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வோம். எப்படியும் வீடுகளை பெற்றுத்தர முயற்சிப்போம்.


ஏழைகளை அப்புறப்படுத்துவதை போல பெரிய மாளிகைகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தாதது ஏன் என்ற கேள்வியை சட்டமன்றத்தில் 2001ல் நான் எழுப்பியிருந்தேன். அவர்களை அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் என்று அப்போதைய அமைச்சர் பா.வளர்மதி கூறினார். இதனால், நான் ஆவேசமாக சட்டசபையில் எப்படி அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பினேன். அவர்களுக்கு மாற்று இடம் அளிக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றேன்.




உண்மையாக ஆக்கிரமிப்பு செய்பவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றத்தால் கூட முடியவில்லை. இன்றைக்கு சென்னையில் ஏராளமான ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியில் கூட குடிசைகளை அகற்றியவர்கள், குடிசையை ஒட்டியுள்ள பெரிய, பெரிய கட்டிடங்களை அகற்றவில்லை. இது ஓரவஞ்சனை.


நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. நீதிமன்ற தீர்ப்புகள் எளிய மக்கள் மீதுதான் ஏவப்படுகிறது எனும்போது கவலையாக உள்ளது.


இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மிகவும் மென்மையாகதான் இதை அணுகுகிறார்கள். மக்களுக்கு போதிய நேரமும், பொருட்களை அகற்ற போதிய கால அவகாசம் அளித்துள்ளனர். இதை மக்களே கூறினர். 2015ம் ஆண்டு இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசும் இரண்டு, மூன்று முறை அறிவிப்பு அளித்துள்ளனர். தற்போது அரசு ஒதுக்கும் வீடுகள் அவர்களுக்கு கட்டாயம் போதாது”. இவ்வாறு அவர் கூறினார்.