DMK vs Congress: சோனியா - மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தையா? முடிவுக்கு வருமா திமுக - காங்கிரஸ் மல்லுகட்டு?
திமுக - காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், சோனியா காந்தி - மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக-விற்கு எதிர்க்கட்சிகளை காட்டிலும் கூட்டணி கட்சிகள் தலைவலி அளித்து வருகிறது.
தலைவலி தரும் காங்கிரஸ்:
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை வலுவாக முன்னெடுத்து வருவது திமுக தலைமைக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, அந்த கட்சியின் எம்பி-யான மாணிக்கம்தாகூர் திமுக-வை கடுமையாக விமர்சிப்பதுடன், காங்கிரசுக்கு எதிராக பேசிய திமுக மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.
திமுக தலைமைக்கு தலைவலி அளிக்கும் வகையில் பேசி வரும் மாணிக்கம்தாகூர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் கொறடாவாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோனியாகாந்தி - மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை?
திமுக - காங்கிரசுக்குள் நடக்கும் கூட்டணி மோதலை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர சோனியா காந்தியுடன் மு.க.ஸ்டாலினே நேரில் பேசுவதுதான் ஒரே வழி என்று இரு கட்சியிலும் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். பெங்களூரில் காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பேசியபோது, தற்போதைய திமுக - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கியது சோனியாகாந்தி என்பதால், அவருடன் மு.க.ஸ்டாலின் பேசினால்தான் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது?
வரும் 22ம் தேதி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற சோனியா காந்தி - மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றே கருதப்படுகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி கண்டிப்பாக நீடிக்க வேண்டும் என்று விரும்பும் இரு தரப்பு தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்போ அல்லது தேர்தல் தேதி அறிவித்த உடனே இவர்களது பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதப்படுகிறது. திமுக-வை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்றும், அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய இயலாது என்றும் ராகுல் காந்தியை திமுக சார்பில் கனிமொழி நேரில் சந்தித்து திட்டவட்டமாக தெரிவித்தும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைப்பதாலும், போஸ்டர்கள் ஒட்டுவதாலும் திமுக மாவட்டச் செயலாளர்கள் காங்கிரசை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.























