திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஆற்காடு வீராசாமிக்கு உடல்நலக்குறைவு:


வயதுமூப்பு காரணமாக, கடந்த பல ஆண்டுகளாகவே, ஆற்காடு வீராசாமி வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையை போன்று வீட்டிலேயே கட்டில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு அவரை பார்த்து கொள்வதற்காக பராமரிப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


இவரின் மகன்தான், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி, கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.


ஆற்காடு வீராசாமியின் அரசியல் வாழ்க்கை:


கடந்த 1996ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து,  ஆற்காடு வீராசாமிக்கு சுகாதாரம் மற்றும் மின்துறை வழங்கப்பட்டது. கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக அன்பழகன் செயல்படுத்தபோது, அவர்களுக்கு அடுத்தப்படியாக பொருளாளர் பதவியை வகித்தவர் ஆற்காடு வீராசாமி. திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.


கடந்த 1967 மற்றும் 1971 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1977 மற்றும் 1984 ஆண்டுகளில் சட்ட மேலவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதை தொடர்ந்து, 1989ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். 1996, 2001, 2006 ஆண்டுகளில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.


கடந்த 1970களின் பிற்பகுதியில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, மிசா சட்டத்தின் கீழ் திமுக முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது, கருணாநிதியின் மகன் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் ஸ்டாலின் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது, ஆற்காடு வீராசாமிதான் அவரை காப்பாற்றியுள்ளார்.


ஸ்டாலினை காப்பாற்ற முயன்றபோது, சிறை அதிகாரிகள் தாக்கியதால் ஆற்காடு வீராசாமிக்கு காது கேட்காமல் போனது. இந்த சம்பவத்தை, தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலினே பல முறை நினைவு கூர்ந்துள்ளார். 


இதையும் படிக்க: Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில்.. அரிய புகைப்படங்களுடன் அன்று முதல் இன்று வரை- முழு டைம்லைன் இதோ!