புத்தாண்டுக்கு முதலமைச்சரை சந்திக்க வர வேண்டாம்: திமுக தலைமை வலியுறுத்தல்

புத்தாண்டு தினத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வர வேண்டாம் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்கள்:

குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

வரலாறு காணத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடப்பதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பலரும் தங்களது வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கான இடமும் இல்லாமல் அடிப்படை வாழ்வாதரத்தை கூட இழந்து தவித்தனர்.

தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, இந்திய ராணுவம், காவல் துறை என பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

அமைச்சர், நிர்வாகிகளுக்கு வலியுறுத்தல்:

அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருடகளையும் அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது.

இதற்கிடையே, புத்தாண்டு அன்று தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் அது தொடர்பான பணிகளுக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுக்கக் கூடும் எனத் தெரிகிறது. 

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுக தலைமைக்கழகம் என்னதான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டாலும் கூட ஜனவரி 1 அன்று வழக்கம் போல் கட்சியினர் கூட்டம் முதலமைச்சரை சந்திக்க திரண்டு விடும் எனத் தெரிகிறது.

 

Continues below advertisement