திமுக சார்பில் டிசம்பர் 16 அன்று தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் நூற்றாண்டு விழா:


தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 1ஆம் தேதி அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. 


அதில், "முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். 


இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது” குறிப்பிடப்பட்டது.


பட்டியல்:


அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் வருகிற 16.12.2022 (வியாழக்கிழமை) அன்று “பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள்" நடைபெறும் இடங்கள், பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியலை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


காஞ்சிபுரத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் எம்பி ஜெகத்ரட்சகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. கோவை மாநகரில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் ஈரோடு சத்தியவதி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.


டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் பெயர்:


திமுக மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு அந்த வளாகம் 'பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என அழைக்கப்படும் என்றும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின்  நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு  ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.