ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதியில் யார் அடுத்த வேட்பாளர் என்ற பரபரப்பு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. 


கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்தித்தது. இதில், திமுக 125 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். தமாகா சார்பில் யுவராஜா என்பவரும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவரும் போட்டியிட்டனர். அதில் 67,300 ஓட்டுகள் பெற்று 8,904 வாக்குகள் முன்னிலையில் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். அவருக்கான ஓட்டு சதவிதம் 44.27 ஆக இருந்தது. பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி திருமகன் ஈவேரா உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 


இதையடுத்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற் பயங்கர எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் திமுக கூட்டணியில் கடந்த முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தொகுதியில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட திட்டமிட்டனர். ஆனால் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக களமிறக்கியது. 


இதைத்தொடர்ந்து 2023 இடைத்தேர்தலில் போட்டியிட்டு 66,233 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார் ஈவிகேஎஸ். 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆனாலும் மகன் இழப்பை தாங்காத அவர் அவ்வபோது உடல்நிலை சரியில்லாமல் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர், காய்ச்சல் காரணமாக ஈவிகேஎஸ் மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 


ஒரு மாதமாக சிகிச்சைப்பெற்று வந்த ஈவிகேஎஸ் நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதனால் இங்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் உறவினர்கள் யாரையாது நிறுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் ஈவிகேஎஸ்  இளைய மகன் சஞ்சய் சம்பத்தை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டார். அவர் மறுப்பு சொல்லவே திமுக தொகுதியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. காங்கிரஸில் பல அணிகள் உள்ளதாலேயே திமுக பயப்படுகிறதாம். அதனால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே நின்று விடலாம் என நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெறும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 


திமுகவுக்கு தொகுதி கிடைத்தால் திமுக மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சந்திரகுமார், சச்சிதானந்தம் ஆகியோர் சீட் வாங்க துடித்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.