திமுக-வின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு. சென்னையின் திமுக தலைவர்களில் மிகவும் முக்கியமான ஒருவராக சேகர்பாபு உள்ளார். திமுக ஆட்சியின்போது மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களில் ஒருவராகவும் சேகர்பாபு திகழ்ந்தார்.

Continues below advertisement

சேகர்பாபு மீது குற்றச்சாட்டு:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. சென்னை திமுக-வின் கோட்டை என்று கூறி வந்த நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளை அறிமுக கட்சியான தவெக தட்டிப்பறித்தது. முன்னாள் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த தோல்விக்கும், சென்னை திமுக-வின் கையை விட்டுச் சென்றதற்கும் முக்கிய காரணமாக சேகர்பாபு மீது திமுக-வின் மூத்த நிர்வாகிகள் உள்பட பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். குறிப்பாக, மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு முக்கிய காரணமாக சேகர்பாபுவே பலராலும் கூறப்பட்டார். கொளத்தூர் தொகுதியின் பொறுப்பாளராக அவர் சிறப்பாக செயல்படாததே மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஓரங்கட்டப்படும் சேகர்பாபு:

இந்த சூழலில், இன்று சட்டசபைக்கு வெளியே திமுக எம்எல்ஏ-க்கள் உதயநிதி ஸ்டாலினுக்காக காத்திருந்தபோது ஊடகங்கள் முன்பாகவே திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் எவ்வளவு நாள்தான் சேகர்பாபு என்று ஏதோ கூற வந்தார். பின்னர், ஊடகங்களைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் அமைதியானார்.

திமுக-வின் தோல்வியாலும், மு.க.ஸ்டாலினின் தோல்வியாலும் சேகர்பாபு அதிருப்தியாளர்கள் அவரை ஓரங்கட்டுவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர். கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பரந்தாமன் வெளிப்படையாகவே சேகர்பாபுவை எதிர்த்து வருகிறார். இந்த சூழலில் இன்று சட்டசபையில் நடந்த நிகழ்வும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

பதவி பறிபோகுமா?

திமுக மறுசீரமைப்புக்குழு அளித்த அறிக்கையில் தோல்விக்கு காரணமான 20 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பல மாவட்டச் செயலாளர்கள் வசம் உள்ள 4, 5 தொகுதிகளை 3 தொகுதிகளாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் லிஸ்டில் சேகர்பாபு பெயரே இருப்பதாக கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலினுடன் இருந்த அளவு நெருக்கத்தை சேகர்பாபுவால் உதயநிதியிடம் காட்ட இயலவில்லை என்றே கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம் கருதி கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே உதயநிதி ஆர்வம் காட்டி வருகிறார். மு.க.ஸ்டாலினும் திமுக-வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில்  உதயநிதி எடுக்கும் முடிவுகளுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காத்திருப்பு:

உதயநிதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட போது, அவருடன் நெருக்கத்தை காட்டும் விதமாக அவரும் உதயநிதியுடன் இணைந்து தஞ்சைக்கு போலீஸ் வேனிலே உடன் சென்றார். ஆனாலும்,  திமுக ஆட்சியின்போது அடிக்கடி பேட்டி அளித்து வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தற்போது அதிகளவில் நிருபர்களைச் சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார்.

இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய காரணங்களால் தற்போது மறுசீரமைப்பை திமுக ஒத்திவைத்துள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகே சேகர்பாபுவின் நிலை என்னவென்று தெரிய வரும்.