அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வரும் நிலையில் திமுக தொண்டர்கள் காரை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று (மே 26) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வரும் இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் கேரளா, ஹைதரபாத்திலும் சோதனை நடைபெறுவதாக  கூறப்படுகிறது. கரூர்  ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்  இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்டு ஏராளமான திமுக தொண்டர்கள் அங்கு குவிந்தனர். கரூர் மாநகராட்சி மேயர்  கவிதா கணேசன் உட்பட திமுக நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 


இதனிடையே சோதனைக்கு வந்த அதிகாரிகள் காரில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுக்க வந்தனர். அப்போது 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அவர்களை முற்றுகை விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண் அதிகாரி ஒருவரை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த காரையும் திமுகவினர் சேதப்படுத்தினர். காரின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் கரூரில் உள்ள செந்தில் பாலாஜி நண்பர் வீடு, கோவையில் உள்ள  செந்தில் பாலாஜி ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. 


இதனிடையே சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களுக்கு தகவல் அளிக்கவில்லை என கரூர் எஸ்.பி. விளக்கமளித்துள்ளார். மேலும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களையும் பாதுகாப்புக்கு அழைத்து வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் அதிகாரிகள் முற்றுகை, கார் கண்ணாடி உடைப்பு  சம்பவத்தை தொடர்ந்து கரூரில் சோதனை நடைபெறும் 9 இடங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.