MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கடினமாக உழைக்க மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பல்வேறு முக்கியமான தலைவர்கள் தோல்வி அடைந்தனர். ஆட்சியை இழந்ததைக் காட்டிலும், மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது திமுக-வை மிக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
தீவிரமாக வேலை பார்க்கும் திமுக:
இந்த தேர்தல் தோல்வியை மிகவும் தீவிரமாக கள ஆய்வு செய்து கண்டிப்பாக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்காகத்தான் மிக கடுமையாக பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். அதன் முன்னெடுப்பே சமீபத்தில் நடந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களை வைத்து திமுக நடத்திய கூட்டம்.
புதிய அரசியல் எதிரி தவெக:
சமூக வலைதளமும் திமுக-வின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதை திமுக-வின் பலமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அதிமுக மட்டுமே அரை நூற்றாண்டு காலமாக அரசியல் எதிரியாக இருந்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய எதிரியாக தவெக-வும் திமுக-விற்கு உருவாகியுள்ளது.
அதிமுக பலவீனமாக உள்ள நிலையில், தவெக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதால் திமுக திக்குமுக்காடியுள்ளது. தவறுகளை சரி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை ஒரு பரீட்சையாக திமுக-விற்கு எடுத்துக்கொள்ளார்.
5 தொகுதிகளையும் வெல்ல ஆயத்தம்:
பொதுவாக, எந்தவொரு மாநிலத்திலும் நடைபெறும் இடைத்தேர்தலிலும் அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியே வெற்றி பெறுவது வழக்கமாக இருக்கும். தமிழ்நாட்டின் கடந்த கால இடைத்தேர்தல் வரலாறும் அதையே கூறியிருக்கிறது. இந்த சூழலில், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு மற்றும் மதுராந்தகம் ஆகிய 5 தொகுதிகளில் இன்னும் 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக - தவெக இடையே கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது. இதில் 4 தொகுதிகள் அதிமுக வசம் இருந்த தொகுதிகள் என்றாலும் 5 தொகுதிகளையும் கைப்பற்ற தவெக முயற்சி செய்யும். இந்த சூழலில், இழந்த செல்வாக்கை மீட்கும் முதல் முயற்சியாகவும், வெற்றிப் பாதைக்கு திரும்பும் முயற்சியாகவும் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தீர்மானித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் உத்தரவு:
இதன் காரணமாக இந்த 5 தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களை தீவிரமாக களப்பணியாற்ற மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகுதிகளின் கள நிலவரம், திமுக-வின் செல்வாக்கு, இந்த தொகுதியில் பணியாற்றும் திமுக நிர்வாகிகளின் செயல்பாடு, கடந்த முறை களமிறங்கிய வேட்பாளர் தோற்றதற்கு காரணங்கள்? வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம்? என்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இளம் தலைமுறையினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் வாக்குகளையும் கவர என்ன செய்யலாம்? என்றும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் களமிறங்க வாய்ப்பு இல்லை என்றே தெரிய வந்துள்ளது. அதேசமயம், அவரை போட்டியிட கட்சியின் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகள் தயவில் ஆட்சி நடத்தும் விஜய்க்கு, இந்த இடைத்தேர்தல் சவாலானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















