உள்ளாட்சி தேர்தலா? தற்போது வேண்டாம் தலைவரே என்று திமுக சீனியர்கள் சொல்லி வந்த நிலையில், இது தான் சரியான நேரம், உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிடலாம் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பதற்கு பின்னணியில் பக்கா பிளான் இருப்பதாக தெரிகிறது.


தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுக பெயரளவில் மட்டுமே எதிர்கட்சியாக இருப்பதால் ஆளும் திமுக அரசுக்கு கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை என்ற நிலையே தமிழக அரசியலில் நீடிக்கிறது. அதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு, மற்ற கட்சிகள் தேர்தல் குறித்து யோசிப்பதற்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது திமுக.


இந்நிலையில் கடந்த 2019ல் நடந்த 27 மாவட்டங்களுக்கான, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இத்தகைய சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைமையும் அந்த யோசனையில் தான் இருந்தது, ஆனால் இந்த விஷயத்தில் புது ரூட்டை எடுத்துள்ளார் ஸ்டாலின்.


தற்போது தமிழ்நாட்டில் திமுக அரசின் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும், எதிரணி பலவீனமாக இருக்கிறது. அதிமுக EPS தலைமையில் இயங்கினாலும், OPS அணி, TTV தினகரன் அணி, சசிகலா என உடைந்து நிற்கிறது. தற்போதைய நிலையில் பாஜகவும் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருகிறது. அதிமுக சீனியர்கள் சிலரும் எடப்பாடி பழனிசாமியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால் இதே நிலை 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் நிலவும் என்று சொல்ல முடியாது, அதனால் குழப்பங்கள் நிலவும் போதே உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் எளிதாக வென்று விடலாம் என ஸ்டாலின் கணக்கு போடுகிறார்.


மேலும் தற்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக பெரிதாக அதில் சிரத்தை எடுத்துக்கொள்ளாது. அதே நேரம் அதிமுகவின் வாக்குகள் சிதறி கிடக்கும் நிலையில், தவெக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் நின்றால் வாக்குகள் பலவகையில் சிதறும், இதனால் உள்ளாட்சி தேர்தலை எளிதாக கைப்பற்றி விடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.


2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, மாஸான வெற்றியை பதிவு செய்வதன் மூலம் மக்கள் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்ட முடியும். மேலும் திமுக தொண்டர்களும் உற்சாகம் அடைவார்கள், அடுத்தது நம்முடைய ஆட்சி வந்தால் தான் பலன் கிடைக்கும் என்று திமுகவை ஆட்சி அறியணையில் அமற வைக்க கடுமையாக உழைப்பார்கள் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.


இதனால் ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளை களைத்துவிட்டு, தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சந்திக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. மாநில தேர்தல் ஆணையத்திற்கும் அதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதால், வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில்  வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால் மிக விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையிடம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.