சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் கட்சிகளின் களம் இளைஞர்களை நோக்கி நகர்ந்துள்ள சூழலில், திமுக ஆதரவு இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்தி வரும் ‘GEN Z DMK’ என்ற நிகழ்ச்சி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி, தற்போதைய தலைமுறை இளைஞர்கள் திமுகவின் பக்கமே இருக்கிறார்கள் என்பதைப் பறைசாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகித்ததால் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்கத் தயாராகி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Continues below advertisement

இந்த நிலையில் அமைப்பின் அன்பானந்தம் என்பவர் முதல்வர் விஜய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒருமையில் பேசியிருந்தார். இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். முதல்வரை அரசியல்ரீதியாக விமர்சிக்கலாம் ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தவறு என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்

Continues below advertisement

இப்படியான சூழலில் அன்பானந்தம் வீட்டிற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் காவல்துறை கைது செய்ய முயன்றதுடன், அவர் வீட்டில் இல்லை என்று குடும்பத்தினர் கூறிய பிறகும் என்ன புகார் என்ற விபரத்தைத் தெரிவிக்காமல் அங்கேயே முகாமிட்டுச் சோதனை நடத்தியுள்ளனர். தற்போது  போலீசார் அவரை கைது செய்ய முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

இது தொடர்பாக எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா? என விமர்சித்துள்ளார்.