6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
தவெக ஆட்சி அமைந்து 6 மாதத்திற்குள்ளே மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை 6 மாத காலத்திற்கு விமர்சிக்கமாட்டோம் என்று கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் அவர் விஜய் அரசை விமர்சித்ததை தவெக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த விமர்சனத்திற்கு காரணம் என்ன? என்பதை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதில் அவர் கூறியிருப்பதாவது,
குற்றங்கள்:
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.
கபட வேட அரசு:
ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.
“கழகத் தலைவர் அவர்களது பேச்சைத் திரித்துப் பரப்புகிறார்கள்”
— DMK (@arivalayam) June 9, 2026
“ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல; மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்”
- விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அவர்கள் அறிக்கை.… pic.twitter.com/OLkjP6gOtu
ஆட்சி கவிழ்ந்து விடுமா?
“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் பேசினார்கள். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!
பேசியது ஏன்?
“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.
மக்கள் ஆவேசம்:
ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள்.
இதைத்தான் தலைவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















