DMK EX Minister Anbarasan: திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தரப்பிடமிருந்து தனது நிலத்தை மீட்டுத்தரவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்தடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்கள்:
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது முதலே, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தலைமறைவாகியுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், எ.வ. வேலு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக, சிவசங்கரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.அந்த வரிசையில் தற்போது சென்னைய சேர்ந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் த. மோ. அன்பரசன் மீது புகார் எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் பணிக்கான அலுவலகம் அமைப்பதற்காக பெறப்பட்ட நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்பரசன் மீதான குற்றச்சாட்டு என்ன?
முதலமைச்சரின் தனிப்பிரிவில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், ”கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது பரங்கிமலையில் தேர்தல் பணிமனைக்காக கொடுத்த 5500 சதுர அடி நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திருப்பி தர மறுக்கிறார். அன்பரசனின் உதவியாளர் என்ற பெயரில் ஒருவர் வந்து கேட்டதன் பேரில் அந்த இடம் தரப்பட்டது. இதற்கென கட்டாயப்படுத்தி 6 மாத குத்தகை ஒப்பந்தமும் ஏற்படுத்தினர். ஆனால், குத்தகை காலம் முடிந்தும் இடத்தை காலி செய்து தரவில்லை. 2 ஆண்டுகளாக வாடகையும் தரவில்லை.
”வாடகை கூட தரவில்லை”
குத்தகை ஒப்பந்தம் சிலரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் போலியாக முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வாடகை கூட தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பரசன் என்னை சந்தித்தார்.
பேச்சுவார்த்தை நடத்திய த.மோ. அன்பரசன்?
அப்போது, ஒருவாரத்தில் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறும், பணம் கொடுத்து விடுவதாகவும் கூறினார். ஆனால் நிலத்தை விற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்று உறுதியாக தெரிவித்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பேசுவதாக கூறிச் சென்றவர், பிறகு எந்த பதிலும் கூறவில்லை. பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் விரைவில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வேலு, சிவசங்கர் ஆகியோர் மோசடி, ஊழல் வழக்குகளில் விசாரணை வளையத்தில் உள்ள நிலையில், தா.மோ.அன்பரசன் மீதும் நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. இவர்கள் மீதான குற்றத்தை நிரூபிப்பதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி தர, ஆளும்தரப்பு முனைப்புடன் உள்ளதாம்.
