வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Continues below advertisement

காட்பாடி தொகுதியில் தோற்ற துரைமுருகன்

2026 சட்டமன்ற தேர்தல் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு பேரிடியாக அமைந்தது. ஒரு பக்கம் திமுக கூட்டணி மொத்தம் 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக மாறியது. இதில் திமுக மட்டும் 59 தொகுதிகளில் வென்றது. அதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தார். அதேபோல திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் தோல்வியை தழுவினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் துரைமுருகன் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தவெக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எம்.சுதாகர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமு இரண்டாமிடம் பிடித்தார். 87 வயதான துரைமுருகனுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

Continues below advertisement

கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக பொதுச்செயலாளராகவும், அதன்பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ., சீட், அமைச்சர் பதவி எல்லாம் அவர் போராடி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதைய தோல்வி அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்தை துரைமுருகனுக்கு வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

15 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகம்

இந்த சூழலில் காட்பாடியில் செயல்படும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா கண்டுள்ளது. அதுவும் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். துரைமுருகனின் கோட்டையாக அறியப்பட்ட காட்பாடியில் கடைசியாக 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறம்பட செயல்பட்டது. ஆனால் 2011-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் இவர் எம்.எல்.ஏ. அலுவகத்தை திறக்கவே இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானபோதும் அவர் பெரும்பாலும் சென்னையில் தங்கியிருந்ததால் தொகுதி பக்கமோ அல்லது எம்.எல்.ஏ.  அலுவலகம் பக்கமோ வரவில்லை. இத்தனைக்கும் இந்த அலுவலகம் துரைமுருகன் வீடு அமைந்துள்ள காந்தி நகரில் தான் அமைந்திருக்கிறது. எப்போதாவது தொகுதிக்குள் வரும் துரைமுருகனை சந்தித்து மனுக் கொடுக்க நினைத்தாலும் அது நடக்காத காரியம். அதையும் மீறி மனு கொடுத்தால் தனக்கே உரிய பாணியில் துரைமுருகனின் உடல்மொழி  மக்களை அலட்சியப்படுத்துவது போல இருக்கும். 

Also Read: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!

இந்த நிலையில் தான் காட்பாடி எம்.எல்.ஏ., அலுவலகம் புதர்மண்டி கிடந்தது. இதன் புகைப்படத்தை மக்களிடம் காட்டியே தவெக எம்.எல்.ஏ. சுதாகர் வாக்கு கேட்டு துரைமுருகனை வீழ்த்தினார். இந்த சூழலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அதனை அரக்கோணம் தவெக எம்.எல்.ஏ.வும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான காந்திராஜ் திறந்து வைத்திருக்கிறார். இதனால் தொகுதி மக்களுக்கு மறக்கடிக்கப்பட்டிருந்த காட்பாடி  எம்.எல்.ஏ., அலுவலகம் தற்போது சுற்றிப்பார்த்து தங்கள் குறைகளை தெரிவிக்கும் இடமாக மாறியுள்ளது.