கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பிறகு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், திமுக. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பி.டி.அரசகுமார். அவரது உறவினர்களான ஆரோக்கிய ராஜ், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக அன்பில் மகேஷ் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அன்பில் மகேஷ் கைது
இதனையடுத்து இந்த வழக்கு ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்பில் மகேஷிக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அன்றைய தினமே அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் வைரலானது
இதனிடையே புழல் சிறைக்கு அன்பில் மகேஷ் அழைத்து வந்தபோது போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டனர். அப்போது வேலுார் மாநகராட்சி கவுன்சிலரும், மகேஷ் ஆதரவாளருமான டீட்டா சரவணன், 'கரூர் சம்பவத்தின் போதே, அவரை போட்டு இருந்தால், இந்த நிலைமை வந்திருக்குமா தலைவரே' என, அவரிடம் ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
டீட்டா சரவணன் கைது
இதுதொடர்பாக புகாரில், சென்னை புழல் போலீசார் டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூரு செல்வது போல் போக்குகாட்டிவிட்டு விழுப்புரத்தில் பதுங்கியிருந்த டீட்டா சரவணனை போலீசார் கைது செய்தனர். இவர் வேலுார் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
