நாடாளுமன்ற தேர்தல் 2024:


நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.  மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.


அதேபோல், இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என I.N.D.I.A. கூட்டணியின் மூலம் காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை  முடுக்கிவிட்டுள்ளன.  குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தரப்பில், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்காக 3 குழுக்களை அமைத்துள்ளது. 


திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை: 


இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டிற்கான, முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று  நடைபெற்றது.  திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று முடிந்தது.


இதில், காங்கிரஸ் தரப்பில்  பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தை உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். அதேபோல, திமுக தரப்பில், டி.ஆர்.பாலு, கே.என்.நேர,  ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றனர். 


 ”திருப்திகரமாக இருந்தது”


தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. இதன்பின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தி.மு.க.வுடன் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக மேற்கொண்டு பேசவேண்டிய விஷயங்களை வெகுவிரைவில் பேசுவோம்.


40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது, எவ்வாறு வேட்பாளர்களை தேர்வு செய்வது, பா.ஜ.க., அ.தி.மு.க.வை எவ்வாறு எதிர்கொள்வது  என்பது குறித்து பேசினோம். திமுகவிடம் நாங்கள் தொகுதிப் பட்டியல் எதையும் வழங்கவில்லை"  என்றார். 


இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், ”நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முதல் பேச்சுவார்த்தை நீண்டநேரம் நடைபெற்றது.  தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்து விவாதித்தோம். திமுகவுடன்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது" என்றார்.


காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்?


2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால், இந்த தேர்தலில் 15 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, காங்கிரஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் தான் இன்றைய பேச்சுவார்த்தையும் நடந்தது என தெரிகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், மீண்டும் 38 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.