நேற்று மாலை முதல் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விஜய் ஆட்சி அமைப்பதை இரு கட்சித் தலைமைகளாலும் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், இப்படியான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து, பேசி வருவதகாவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. தமிழ் ஊடக நிறுவனங்களே அப்படியான செய்திகளை வெளியிட தயங்கிய நிலையில், ஆங்கில ஊடகங்கள் இந்த தகவல்களை வைத்து பரபரப்பை உண்டாக்கின.

ஆனால், ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அந்த செய்திகளில் உண்மைத் தன்மை இல்லையென திமுகவினர் மற்றும் அதிமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.

கமா போட்ட ரஜினிகாந்த்

இதற்கெல்லாம் காற்புள்ளி எங்கே தொடங்கியது என்று தேடினால், நேற்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதுதான் தொடக்கம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனை வைத்தே பல ஹேசியமான தகவல்கள் கசிந்ததாகவும், அதனை வைத்தே ஊடகங்களும் செய்தியாக வெளியிடத் தொடங்கின.

பேச்சுவார்த்தை நடந்தது உண்மையா..?

அதே நேரத்தில், திமுக – அதிமுக ஆகிய இருதரப்பிற்கும் நடுநிலையாக இருக்கும் சில முக்கியஸ்தர்கள், விஜயை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்ற தோனியில் இரு தரப்பு தலைமையிடமே பேசியதாகவும், விஜயை ஆட்சி அமைக்க விட்டால் அடுத்த 15 வருடங்களுக்கு அவரை வீழ்த்த முடியாது என்ற வகையில் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இப்படியான இந்த முயற்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லையென்று கூறப்படும் அதே நேரத்தில், 2ஆம் கட்ட தலைவர்களாக உள்ள முன்னாள் அமைச்சர் சிலர், இந்த முயற்சியை பரிட்சித்து பார்க்கலாம் என மு.க.ஸ்டாலினை ஒத்துக்கொள்ள வைக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி கொடுத்த ஸ்டாலின்

இதனையடுத்து, ஆங்கில நாளேடு ஒன்றிற்கு பேட்டி கொடுத்த மு.க.ஸ்டாலின், விஜய் ஆட்சி அமைப்பதற்கு திமுக ஒரு தடையாக இருக்காது என்றும் ஆட்சி அமைந்த பிறகு ஆறு மாத காலத்திற்கு விஜய் எப்படி ஆட்சி செய்வார் என்பதை முதலில் பார்ப்போம் என்றும் அந்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்து, ஊகங்களும், தீயாய் பரவிய செய்திகளும் முற்றுபுள்ளி வைத்தார்.

இருப்பினும், அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அங்கு சென்றிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.