திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிவிப்பு, “மிக்ஜாம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக  ஒத்தி வைக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு”, வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்” என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.


திமுக இளைஞரணி மாநாடு:


மதுரையில் அதிமுக மாநாடு நடந்து முடிந்ததுமே, அதைவிட பிரமாண்டமான முறையில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுவதாக நடத்தப்படுவதாக இருந்த மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், சென்னையில் பெருமழை பெய்தது. இதுதொடர்பான மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி உள்ளிட்டோஒர் ஈடுபட்டு இருந்தனர். இதனால், இளைஞரணி மாநாடு டிசம்பர் 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


2வது முறையாக ஒத்திவைப்பு:


மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியது. இதனால், ஒட்டுமொத்த அரசாங்க இயந்திரமும் தென்மாவட்டங்களில் களமிறங்கியது. இதன் விளைவாக திமுக இளைஞரணி மாநாடு, தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தான் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.


மோட்டார்சைக்கிளில் பரப்புரை:


உதயநிதியை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியாக தான், இந்த மாநாட்டை திமுக ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் விதமாக தான கடந்த நவம்பர் 15ம் தேதி உதயநிதி இருசக்கர வாகன பேரணி ஒன்றை அவர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய அந்த பரப்புரையின் மூலம், 188 இருசக்கர வாகனங்களில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகள் மட்டுமின்றி, புதுச்சேரி வழியாகவும் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த பயணத்தில்  8 ஆயிரத்து 647 கிலோ மிட்டர் தூரம் பயணத்து 504 பரப்புரை மையங்கள் மற்றும் 38 தெருமுனை பரப்புரைகள் நடத்தப்பட்டன. பயணத்தின் போது 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து, மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.