சொத்து பட்டியல் தகவல்கள் என்ற பெயருடன் டிஎம்கே ஃபைல்ஸ் என்னும் தகவல்களை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். சுமார் ரூ. 2,039 கோடி சொத்து அமைச்சர் உதயநிதிக்கு இருப்பதாக தெரிவித்தார்.
தன் மீது அவதூறு பரப்பியதாக, அமைச்சர் உதயநிதி சார்பில் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. அவதூறு பரப்பிய அண்ணாமலை 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தனது ட்விட்டர் பக்கத்தில், ”இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், கழகத்தின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மூத்த வழக்கறிஞர் வில்சன் MP அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், “2021 ஆம் ஆண்டு சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழக அரசின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடனாளிகளுக்கான மாண்புமிகு அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் அவர் செய்த பணி தேசிய அளவில் கூட பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே என்று எங்கள் வாடிக்கையாளர் கூறுகிறார். எங்கள் வாடிக்கையாளர் தனது வாக்காளர்களின் நலனுக்காக இரவு பகலாக உழைத்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு பொது மக்கள் மத்தில் நல்ல பெயர் உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த செய்தியாளர் சந்திப்பு டிவி மற்றும் யூடியூப் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, இப்போது பல யூடியூப் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் காணப்படுகிறது. அப்போது, அந்த வீடியோவின் 26.37 நிமிடத்தில், "டிஎம்கே ஃபைல்ஸ்" என்ற குறும்படத்தின் ஒரு பகுதியாக, எங்களது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் மற்றும் பெயர் காட்டப்பட்டு அவருக்கு ரூ.2,039 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதில், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் குடும்ப வாரிசுகளை எந்தக் காரணமும் இல்லாமல், அவரது இரு குழந்தைகளின் (மைனர் மகள் உட்பட) பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தனது பிள்ளைகள் திமுக கட்சியின் உறுப்பினர்களோ அல்லது அலுவலகப் பொறுப்பாளர்களோ இல்லை என்றும், பொது வாழ்வில் இல்லை என்றும், எனவே அந்த வீடியோவில் அவர்களின் பெயர்களை சேர்ப்பது எங்களது தனியுரிமை உரிமையை மீறுகிறது. அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்ட வீடியோ கிளிப்பிங்கில் தனது மைனர் மகளின் பெயரைச் சேர்ப்பது, ஐக்கிய நாடுகளின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களின் பிரிவு 8, 16 மற்றும் 37 இன் கீழ் தனியுரிமைக்கான உரிமையை மீறும் செயல்.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் நிற்கும் போது அவர் ஏற்கனவே தனது சொத்துக்கள் மற்றும் கடன்களைக் காட்டியுள்ளார் என்றும், அது பொது தளத்தில் இருப்பதாகவும் தெரிவித்து தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
சொத்துக்கள் ரூ. 2,039 கோடிகள் ஆதாரமற்றவை, பொய்யானவை. இதன் மூலம் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை. ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தபோது, நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி மட்டுமே. எனவே 48 மணிநேரத்தில் அவதூறு பரப்பியதாக கூறப்படும் அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்டு, ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.