தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியை மிகவும் வலுவாக வைத்துள்ளது. 

Continues below advertisement

தொகுதிகள் பட்டியல் தீவிரம்:

திமுக கூட்டணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக இணைந்தது. தேமுதிக-வின் இந்த முடிவு தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தேர்தல்களில் எந்தவொரு வெற்றியும் இல்லாமல் இருந்த தேமுதிக இந்த முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால், சில இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

தேமுதிக-வின் வாக்கு வங்கி அதிகமாக உள்ள இடங்கள், விஜயகாந்த் உடல்நலம் குன்றிய பிறகும் அவருக்கு வாக்குகள் அதிகளவு விழுந்த இடங்கள் என தேமுதிக போட்டியிடுவதற்காக சில தொகுதிகளின் பட்டியலை தேமுதிக தலைமை தயார் செய்து வருகிறது. 

Continues below advertisement

எந்த தொகுதியில் பிரேமலதா?

இந்த தேர்தலில் தற்போது வரை 6 இடங்கள் வரை தேமுதிக-விற்கு தர திமுக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில், ஒரு வேளை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகினால் கூடுதல் இடங்களை கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. அதேசமயம், பிரேமலதா விஜயகாந்த் இந்த தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடலாம்? என தீவிரமாக ஆலோசித்து வருகிறார். 

விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதி ஆகிய இரண்டில் ஒன்றில் போட்டியிட அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த இரண்டு தொகுதிகளும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற தொகுதிகள் ஆகும். கடந்த தேர்தலில் விருத்தாச்சலத்தில் தனித்து நின்று போட்டியிட்ட பிரேமலதா தோல்வி அடைந்தார். 

பிரேமலதா உத்தரவு:

இந்த தேர்தலில் அதேபோல மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த விஜயபிரபாகரனும் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

கூட்டணி பங்கீடு இறுதியாகும் வரை திமுக-வின் முக்கிய தலைவர்களையும், கூட்டணி பங்கீடு குறித்தும் தேமுதிக நிர்வாகிகள் பேச வேண்டாம் என்று பிரேமலதா விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீட்பதுடன், கட்சியின் அங்கீகாரத்தையும், முரசு சின்னத்தையும் மீட்கவும் தேமுதிக தீவிரமாக களப்பணியாற்ற திட்டமிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்றுவிடும் முயற்சியிலும் பிரேமலதா தீவிரமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.