தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை காண தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்து அனைவரிடத்தின் அன்பாக பழகிய விஜயகாந்த், அரசியல் களத்திலும் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்தார். கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்திலேயே மிகவும் துணிச்சலாக கட்சி தொடங்கினார். மேலும் அதிமுகவுடன் 2011 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். அதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் மாறி மாறி கூட்டணி அமைத்தது, முக்கிய நிர்வாகிகள் விலகல் என அக்கட்சி சரிவை நோக்கி சென்றது.
இப்படியான நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்துக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட தொடங்கியது. 2 முறை சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்தார். அவரை பொதுவெளியில் காண்பதே அரிதாகி விட்டது. அவ்வப்போது கட்சி அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அதேசமயம் அவரது குடும்பத்தினர் பண்டிகை தினங்களில் விஜயகாந்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவர்.
எதையும் தைரியமாக தட்டி கேட்க கூடியவர், பேசக்கூடியவர் என்ற பெயரை அரசியல் களத்தில் பெற்ற விஜயகாந்த் என்ற ஆளுமையை மிஸ் பண்ணுவதாக இன்றைக்கும் அவரை நினைத்து கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை காணலாம். இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி விஜயகாந்துக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நலன் குறித்து பல வதந்திகள் காட்டுத்தீயாக பரவ, தொண்டர்களும், ரசிகர்களும் பதறி போயினர். தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கண் கலங்கியபடி வீடியோ வெளியிட்டார். அதன்பிறகு மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியானதும் தான் அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி அக்கட்சியின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 14 ஆம் தேதியான இன்று காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்த வேண்டிய பணிகள், கழகத்தின் எதிர்கால திட்டம் குறித்து இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுமென கூறப்படுகிறது.