இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு சென்ட்ரல் -மங்களூரு, எழும்பூா்-திருவனந்தபுரம், திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், அக்டோபர் 21,22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06156) பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06155) செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில், திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா் வழியாக செங்கல்பட்டு சென்றடையும்.
சென்னை ரயில்களாவது போத்தனூரிலிருந்து அக்டோபர் 19-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06044) மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06001) சென்ட்ரலிலிருந்து அக்.20-இல் பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மங்களூரு சென்றடையும். மங்களூரிலிருந்து அக்.21-இல் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 06002) மறுநாள் காலை 10.15 மணிக்கு சென்ட்ரல் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06043) அக்.22-இல் சென்ட்ரலிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு போத்தனூா் சென்றடையும். இந்த ரயில்கள், சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக மங்களூரு சென்றடையும்.
அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்து அக்.21-இல் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்: 06108) மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06107) எழும்பூரிலிருந்து அக்.22-இல் பிற்பகல் 1.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில், எழும்பூரிலிருந்து பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.இந்த ரயில்களுக்கான முன்பதிவுகள் அக். 12-ஆம் தேதி காலை 8 முதல் தொடங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.