தீபாவளி ஸ்பெஷல்: நெல்லை, சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
தீபாவளி வருவதாலும், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மக்கள் கிளம்பி விடுவார்கள். ஏற்கனவே மக்கள் ரயில்களில் முன்பதிவு செய்துவிட்டனர்.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு திங்கட்கிழமை தீபாவளி வருவதாலும், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மக்கள் கிளம்பி விடுவார்கள். ஏற்கனவே மக்கள் ரயில்களில் முன்பதிவு செய்துவிட்டனர். அதற்கான டிக்கெட் முடிந்துவிட்டது. தென் மாவட்ட ரயில்களில் முழுவதுமாக டிக்கெட் தீர்ந்து விட்டன. எனவே சிறப்பு ரயில்களை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி தென் மாவட்டமான நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி நெல்லை - செங்கல்பட்டு இரு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படுகிறது. அதே நாள் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு வந்தடைகிறது. மறு மார்க்கத்தில், செங்கல்பட்டு - நெல்லை இரு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படுகிறது. அதே நாள் இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
இதில் 2 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 1 ஏசி சேர்கார், 12 அமரும் வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது 2ஆம் வகுப்பு பெட்டிகள், மற்றும் இரு 2ஆம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.மற்றொரு ரயில் நெல்லை வழியாக இயக்கப்படுகிறது. அதாவது திருவனந்தபுரம் நார்த் - எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 21 அன்று திருவனந்தபுரம் நார்த்திலிருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்படுகிறது. மறுநாள் காலை 11 மணிக்கு எழும்பூரை சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், எழும்பூர் - திருவனந்தபுரம் நார்த் அதிவிரைவு சிறப்பு ரயில் அக்டோபர் 22 சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.25 மணிக்குப் புறப்படுகிறது. மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் நார்த்தை வந்தடைகிறது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதல் 16 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் உள்ளன. இந்த தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.





















