தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் தீபாவளி மற்றும் பொங்கல் ஆகும். இந்த இரு பண்டிகைகளுக்குத்தான் வெளியூரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது குடும்பத்துடன் கொண்டாட தவறாமல் செல்வார்கள். 

Continues below advertisement

தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்கள்:

நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் தீீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது பட்டாசுதான். சிறுவர்கள், சிறுமிகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும்  பட்டாசு வெடிப்பது வழக்கம். 

பட்டாசு வெடிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் ஒரு அங்கமாக தமிழ்நாடு முழுவதும் 1353 அவசர கால ஊர்தியான 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

முன்னெச்சரிக்கை:

மருத்துவ குழு அடங்கிய இந்த 108 ஆம்புலன்ஸ்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆம்புலன்ஸ்கள் ஏதேனும் பகுதியில் விபத்து ஏற்பட்டால் விரைவாக செல்லும்  வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் அதிகளவு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பொதுவாக தீபாவளி பண்டிகையின்போது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அரசு சார்பிலும், மருத்துவ குழுவினர் சார்பிலும் விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், துரதிஷ்டவசமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. 

மருத்துவமனைகள் மட்டுமின்றி பொதுமக்கள் நாளை வரை தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ஆர்வத்துடன் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் குவிந்து வருகின்றனர். அவர்களின் ஆரோக்கியம் கருதி மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், மருந்துகள்:

தீபாவளி பண்டிகைக்காக அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருந்துகள் ஆகியவை போதிய இருப்பில் இருப்பதையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளது. மேலும், தீக்காய பிரிவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் உள்ளிட்ட பெரியவர்கள் அவர்களுடன் உடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான மற்றும் அதிக மருந்து, சத்தம் கொண்ட வெடிகளை குழந்தைகள் வெடிக்காமல் இருப்பதையும் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். இதுதவிர நெருக்கடியான இடங்களில் பட்டாசுகள் வெடிக்கும்போது உரிய கவனத்துடன் வெடிக்குமாறும் காவல்துறையினரும், அரசும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தீயணைப்பு வாகனமும், தீயணைப்புத்துறையினரும் தீபாவளி பண்டிகைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.