இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக தீபாவளி உள்ளது. தீபாவளி என்றாலே அனைவரது நினைவுக்கு முதலில் வருவது பட்டாசு ஆகும்.


ஆனால், அளவுக்கு அதிகமான பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் அளவு, பட்டாசு வெடிக்கும் நேரம் என பலவற்றிலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


நடப்பாண்டு பட்டாசு வெடிக்க தமிழக காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.



  • உச்சநீதிமன்ற ஆணைப்படி பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும். பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

  • காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

  • அதிக மக்கள் நடமாடும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • பட்டாசு கடைகள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • பட்டாசு சேமிப்பு கிடங்குகள் அருகில் ஊதுவத்தி, கொசுவர்த்தி போன்வற்றை பற்ற வைக்கக்கூடாது.

  • கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது; அவை மிரண்டு ஓடி ஆபத்தை உண்டாக்கி விடும்.

  • பட்டாசு வெடிப்பதற்கு நீளமான ஊதுவத்தி குச்சியை பயன்படுத்த வேண்டும். தீக்குச்சியையோ, நெருப்பையோ பயன்படுத்தக்கூடாது.

  • குழந்தைகளை பெரியவர்களின் துணையின்றி தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது

  • பட்டாசுகளை டப்பாக்களில் மூடி வெடிப்பதை கைவிட வேண்டும். இது பெரும் ஆபத்தை உண்டாக்கும்.

  • ராக்கெட் போன்ற பட்டாசுகளை குடிசைகள் அருகிலும், மாடி கட்டிடங்கள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • பட்டாசுகளை தீபங்கள் அருகில் வைப்பதை தவிரக்க வேண்டும்.

  • ஈரமான பட்டாசுகளை சிலிண்டர் உள்ள சமையல் அறையில் காய வைக்கக்கூடாது.

  • குடிசை வீடுகள் அருகே வான வெடிகளை வேடிக்கக்கூடாது.

  • பட்டாசு கடைகள் அருகே புகைப்பிடிக்கக்கூடாது; மேலும் அந்த கடைகளின் அருகே பீடி, சிகரெட் போன்றவற்றை புகைத்துவிட்டு எறியக்கூடாது.

  • 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்கவோ வெடிக்கக்கூடாது.

  • எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை நிறுத்திக் கொண்டு பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

  • எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் பங்க் அருகே பட்டாசு வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.


பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.