தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளியை முன்னிட்டு சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வேலை மற்றும் கல்விக்காக வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.


குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ரயில்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம்.


தெற்கு ரயில்வே பயணிகளின் வசதி கருதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்க உள்ளது.


சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை:


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வண்டி எண் 06005 புதன்கிழமை (அக்.30ம் தேதி) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.


மறுமார்க்கத்தில் அக்டோபர் 31ம் தேதி வண்டி எண் 06006 இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை ( நவ.1) காலை 9.30 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயில் நவம்பர் 6ம் தேதியும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து நவம்பர் 7ம் தேதி சென்னைக்கும் இயக்கப்பட உள்ளது.


சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி:


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் அக்டோபர் 29ம் தேதி ( செவ்வாய்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் ( வியாழன்) மதியம் 12.15 மணிக்குச் சென்றடையும்.


அதேபோல, மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து வண்டி எண் 06002 வியாழக்கிழமை ( அக்.30) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாளான தீபாவளியன்று அதிகாலை 3.15 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்


தாம்பரம் – கன்னியாகுமரி:


தீபாவளிக்காக தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 28ம் தேதியான திங்கள்கிழமை நள்ளிரவு 12.35 மணிக்கு வண்டி எண் 06049 பறப்படுகிறது. இந்த ரயில் கன்னியாகுமரிக்கு செவ்வாய் மதியம் 12.15 மணிக்குச் செல்கிறது. இந்த ரயில் நவம்பர் 5ம் தேதியும் இயக்கப்பட உள்ளது.


மறுமார்க்கத்தில் செவ்வாய்கிழமை( அக்.29ம் தேதி) மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் வரும் நவம்பர் 12ம் தேதியும் இயக்கப்பட உள்ளது.


சென்ட்ரல் முதல் மங்களூர் வரை:


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மங்களூர் வரையிலான வண்டி எண் 06037 ரயில்  நவம்பர் 2ம் தேதி (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. அடுத்த நாள் ( ஞாயிறு) காலை 10 மணிக்குச் செல்கிறது.


மறுமார்க்கத்தில் நவம்பர் 3ம் தேதி ( ஞாயிறு) மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்த நாள் திங்கள் கிழமை காலை 11.10 மணிக்கு வந்தடையும்.


இன்று முன்பதிவு:


 இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அனைத்தும் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் இன்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.