Continues below advertisement


டிட்வா புயல் எதிரொலியால் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, 3 மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை உட்பட தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டை நெருங்கிய டிட்வா



வங்கக்கடலில் உருவான ’டிட்வா’ புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.



டிட்வா புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 90 கி.மீ, காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 90 கி.மீ, யாழ்ப்பாணத்தில்(இலங்கை) இருந்து வட-வடகிழக்கில் 130 கி.மீ, புதுச்சேரியில் இருந்து தென்-தென்கிழக்கில் 160 கி.மீ மற்றும் சென்னைக்கு தெற்கே 260 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.


இதனால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 3 மாவட்டங்களில் அவசர உதவிக்காக மக்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



3 மாவட்டங்களில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு


டிட்வா புயல் எதிரொலியாக, திருச்சி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ள நிலையில், அந்த மாவட்டத்திற்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு 1077 மற்றும் 0431 2418995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதேபோல், நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, அவசர கால கட்டுப்பாட்டு எண் 043651077, வாட்ஸ் அப் எண் 8110005558, கட்டணமில்லா எண் 18002334233 ஆகிய எண்களை பொதுமக்கள் தொர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அங்கும் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவசர கால கட்டுப்பாட்டு எண் 1077 மற்றும் 04364-222588 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


விமான சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு


டிட்வா புயல் காரணமாக சென்னை மற்றும் தென்னிந்தியாவின் சில நகரங்களில் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், விமான நிலையத்திற்கு செல்லும் முன்பு, பயணிகள் விமானங்களின் நிலவரத்தை இணையதளத்தில் சரிபார்த்தக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.


மேலும், புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்பட பல நகரங்களில் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


பயணிகள் 011-69329333, 011-69329999 ஆகிய எண்களில் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.