Ditwah Cyclone Update: டிட்வா புயல் இன்று மாலை அல்லது இரவில் சென்னையை நெருங்கும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Continues below advertisement

டிட்வா புயல் திணறல்:

கனமழை தந்த மோசமான அனுபவங்கள் காரணமாக வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் மற்றும் அப்டேட்களை தாண்டி, தனியார் வல்லுநர்களின் தரவுகளுக்கும் மக்கள் முக்கியத்துவம் தர தொடங்கியுள்ளனர். அந்த வகையில் டெல்டா வெதர்மேன் எனப்படும் ஹேமசந்தர், டிட்வா புயல் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை 4.30 மணி நிலவரப்படி, “நேற்று (29.11.2025) காலை 10:30 மணிக்கு டெல்டா கடல் பகுதியை அடைந்த டிட்வா புயல் தொடர்ந்து ஒரே இடத்தில் நீடிக்கிறது. தற்போது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே-வடகிழக்கே 60கிமீ தொலைவிலும், சென்னைக்கு 230 கிமீ தெற்கே-தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. வறண்ட காற்று, காற்று முறிவால் புயல் பாதிக்கப்பட்டுள்ளது.  புயலின் மையப்பகுதியை நோக்கி ஊடுருவிய வறண்ட காற்று மற்றும் காற்று முறிவால் பாதிக்கப்பட்டு டிட்வா புயல் மேக கூட்டங்களை உருவாக்க முடியாமல் திணறி வருகிறது” என ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஏன் கனமழை பொழியவில்லை?

தொடர்ந்து, “புயல் வலுவிழந்து வருவதால் மழை குறைந்து வருகிறது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் 22 செண்டி மீட்டர் நெடுவாசல் பகுதிகளில் 16 செண்டி மீட்டர், தரங்கம்பாடி 15 செண்டி மீட்டர், நாகப்படினத்தில் 14 செண்டி மீட்டர் அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவாகி வருகிறது. புயல் அருகே வந்து அதன் மேற்குபகுதி காவிரி படுகை மீது விழுந்தாலும், அதிகப்படியான மேகக் குவியல் உருவாகாததன் காரணமாக அதீத மழை குறுகிய காலத்தில் தீவிரமடைவது என்பது நிகழவில்லை. தொடர்ந்து வடக்கு நோக்கி பயணிக்கும் புயல் வலுவிழந்து காணப்படும் நிலையில், சென்னைக்கு அருகில் வரும்போது மேற்கத்திய தாழ்வுநிலையில் ஒரு ஊடுருவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் வலுவடையுமா? வறண்ட காற்று அகற்றப்பட்டு, ஈரப்பதம் மிகுந்த காற்று மீண்டும் உருவாகிறதா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்” என ஹேமச்சந்தர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை நோக்கி பயணம்:

மேலும், “இன்று காலை 8 மணி முதல் புயல் நாகையில் இருந்து விலகி சென்னையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது வறண்ட காற்று அகற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மழை மேகங்கள் உருவாக்கப்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது. ஆனால் அது சென்னைக்கு அருகே வலுப்பெறுகிறதா? அல்லது நெல்லூர் அருகே வலுப்பெறுகிறதா? எப்ன்பதை பொறுத்து இருந்து தான் அறிய வேண்டும். தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பொழியும். அதேசமயம் அதீத கனமழைக்கான வாய்ப்பு விலகியது என்று எடுத்துக்கொள்ளலாம்” என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.