வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டிட்வா புயல் தமிழக கடற்கரையை நெருங்கியுள்ள பல மாவட்டங்களில் மழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்றும் நாளையும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரை செய்த டிட்வா பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புயலானது சென்னைக்கு தென் கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இந்த புயலால் இலங்கை முழுவதும் கனமழை, வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்துள்ளது. இதன் தாக்கம் இராமேஸ்வரம், பாம்பன் தீவுகளிலும் எதிரொலித்தது. கடல் சீற்றம், 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இன்று எங்கெல்லாம் மழை?
இந்த புயலின் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய மழைக்கான எச்சரிக்கை:
நாளை(30-11-25)வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.