தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விடவாரியத்தின் அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணை. 


தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக 284 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும் 20 பயனாளிகளுக்கு  தாமாக வீடு கட்டிக்கொள்ள பணிஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சிவாயிலாக, கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூபாய் 2491.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 400 சதுரடி பரப்பளவு கொண்ட 288 அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று (07.12.2022) திறந்து வைத்தார்கள். அதையொட்டி கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சி பகுதியில் இன்று (07.12.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புலியூர் திட்டப்பகுதியில் 283 பயனாளிகளுக்கும், சாணப்பிரட்டி திட்டப்பகுதியில் 1 பயனாளிகளுக்கும் அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும் 20 பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டிக்கொள்ள பணிஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  த.பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலை வகித்தார்கள்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

  


கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, புலியூர் திட்டப்பகுதியில் 283 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 8.65 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணையும், சணப்பிரட்டி திட்டப்பகுதியில் 01 பயனாளிகளுக்கு ரூபாய் 18.35 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணையம் மற்றும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் - பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 நகர்ப்புர பயனாளிகளுக்கு ரூ. 2.10 இலட்சம் மானியத்துடன் வீடு ஈட்டுவதற்கு பணி ஆணையும் வழங்கப்பட்டது.


 மேலும், இத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் புதிதாக மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள பயனாளிகள் முறையாக வீடுகளை கட்டி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்லியாகத், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர்.செல்வி.ரூபினா,  தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி நிர்வாகப்பொறியாளர் திரு. தமிழரசு, உதவி பொறியாளர் திரு. பாலாஜி, புலியூர் பேரூராட்சி தலைவர் திருமதி.புவனேஸ்வரி, பயனாளிகள் கரூர் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான  கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது. 


  2022  -  ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது  ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது   வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தலா ரூ.20000/- ரூ.10000/- மற்றும் ரூ.5000/- தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் ( ஆயுதப்படை வீரர்கள், காவல் தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள்  சமுதாய  நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக  நிகழும்  பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். 
                 


மேலும் இவ்விருதானது ஒரு  சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன  வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்  போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. 
 மேற்காணும் விருதிற்கான  விண்ணப்பம் மற்றும் முக்கிய  விவரங்களை தமிழ்நாடு  விளையாட்டு  ஆணைய  இணையதள   முகவரியான  htpp://awards.tn.gov.in  மற்றும் www.sdat.tn.gov.in  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை பெற்று தலைமையகம் அனுப்பிட வேண்டியுள்ளதால், விண்ணப்பங்களை 13.12.2022 ஆம் தேதிக்குள் கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவகத்தில் மாலை 5.30 மணிக்குள் சமர்பித்திட வேண்டுமாறு கரூர் மாவட்ட  ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.