திருமுல்லைவாயலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


போலீஸ்:


ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்தவர் வள்ளிநாயகம். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம்.  இவர், 2013-ஆம் ஆண்டு போலீசில் வேலைக்கு சேர்ந்தார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை காவலர் பிரிவில் பணியாற்றி வந்தார்.  தற்போது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் போலீஸ் ரோந்து வாகனத்தில் ஓட்டுநராக  வேலை செய்து வந்தார்.


இவருடைய மனைவி திலகவதி, அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த 5-ந் தேதி அதிகாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுடன், போலீஸ்காரர் வள்ளிநாயகம் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமுல்லைவாயல் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. ரோந்து வாகனத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வள்ளிநாயகம் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.


தூக்கிட்டு தற்கொலை:


இதையடுத்து  ரோந்து வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதாக கடந்த 8-ந் தேதி வள்ளிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேதமடைந்த வாகனத்துக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொள்ளும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளிநாயகம், சக காவலர்களிடம் இது பற்றி கவலையுடன் கூறியுள்ளார். வள்ளிநாயகத்தின் 2 மகன்களும் நெல்லையில் உள்ள தங்கள் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளதால்,  வள்ளிநாயகமும், அவரின் மனைவி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். 


இந்நிலையில் நேற்று காலை வள்ளிநாயகத்தின் மனைவி திலகவதி வேலைக்கு சென்று விட்டார். வள்ளிநாயகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததார். அலுவலகத்தில் இருந்து திலகவதி, தனது கணவருக்கு போன் செய்துள்ளார். பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை ஏற்காததால், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹரி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வள்ளிநாயகம் வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், வள்ளிநாயகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Suicidal Trigger Warning.

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)