திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த த.ம.பிரகாஷ், பாலமுருகன் மற்றும் பழனிச்சாமி, சேது ஆகியோர்  இளங்காடு கிராமத்தின் குளக்கரை அருகில் தெலுங்கு மொழி கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தனர். இக்கல்வெட்டு குறித்து மாவட்ட வராலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகன் கூறுகையில், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் என்ற பெயரில் பழைய காலத்தில் வாழ்ந்த நம்முன்னோர்கள் விட்டு சென்ற வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு ‌எல்லாம் வாழ்ந்துள்ளார் ‌என்று எல்லாம் என கல்வெட்டுகள் மூலமாக அவர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் அந்த கல்வெட்டுகள் அனைத்தும் காலப்போக்கில் கல்வெட்டுகள் மறைந்து விட்டது. மறைந்து போன கல்வெட்டுகளை எங்கள் ஆய்வு நடுவம் மூலம் கண்டுப்பிடித்து அதனை அவர்கள் கூறியதை நாங்கள் மக்களிடம் தெரிவிப்போம்.



அந்த வகையில் இளங்காடு கிராமத்தில் உள்ள குளக்கரை அருகில் தெலுங்கு மொழி கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தோம் இக்கல்வெட்டு சுமார் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகையின் முன்புறம் 19 வரியிலும், பின்புறம் 11 வரியிலும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டை படித்த இந்திய தொல்லியல் துறை சென்னை பிரிவின் கல்வெட்டு ஆய்வாளர் யேசுபாபு கல்வெட்டு விளக்கத்தை வரலாற்றுஆய்வு நடுவத்திற்கு அனுப்பினார். இந்த கல்வெட்டு சக ஆண்டு 1669 ஆம் ஆண்டில் அதாவது பொது ஆண்டு 1749ஆம் ஆண்டு வெட்டப்பட்டது என்றும். இக்கல்வெட்டு ஸ்ரீராம நமஹ என்று வழிபாட்டு சொல்லுடன் தொடங்கி இப்பகுதியில் இரண்டு இடங்களில் குளம் வெட்டிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குளம் கர்நாடகா பகுதியில் (தமிழ்நாடு) வந்தவாசி சீர்மையைச் சேர்ந்த கஸ்பா இளங்காடு என்ற இடத்திலும் அதாவது இக்கல்வெட்டு உள்ள ஊரிலும் மற்றொரு குளம் பாராமகாஹானம் என்ற இடத்திலும் வெட்டி உள்ளனர். இந்த குளத்தை மகாராஜா லாலா தூனிச் சந்த் என்பவரின் மகன் லாலா முகம்மது காசிம் என்பவர் வெட்டி உள்ளார். இந்த கஸ்பா இளங்காடு என்பது ஹஸ்ரத் முகமது அலிகான் சாகேப் மற்றும் ஹஸ்ரத் நவாப் அன்வர்த்திகான் ஆட்சிப்பிரிவான சுபாவில் ஒரு கிராமமாக இருந்துள்ளது. இக்குளம் நல்ல தண்ணிர் குளம் என்றும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஊர் மக்கள் இன்றும் இந்த குளத்தின் தண்ணீரைத் பயன்படுத்திவருகின்றர். 


 



இக்கல்வெட்டில் குறிக்கப்படும் அன்வர்திகான் ஆற்காட்டை ஆட்சிபுரிந்த முதல் நவாப் ஆவார். இவரே முதல் மற்றும் இரண்டாம் கர்நாடக போரில் ஆங்கிலேயர் பக்கம் நின்று பிரெஞ்சுப் படைகளை எதிர்த்தவர். தொடர்ந்து நடைபெற்ற‌ போர்களில் 1749ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன்பின் அவரது மகன் முகமது அலிகான் ஆற்காடு நவாப் ஆனார். இந்த கல்வெட்டு மூலம் 18 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த முகம்மதிய சிற்றரசர் லாலா முகமது காசிம் என்பவர் இவ்வூரில் குளத்தைச் வெட்டி வைத்ததும் முகமதிய மன்னர் வெட்டிய கல்வெட்டின் தொடக்கத்தில் ஸ்ரீராமாய நமஹ என்று ஸ்ரீ ராமர் வணக்கத்துடன் இக்கல்வெட்டு தொடங்கி உள்ளதும் இசுலாமியரான ஆற்காடு நவாப் அன்வர்தீகானின் சமயப் பொறையையும் மக்களின் நல்லிணக்கத்தையும் காட்டுவது சிறப்பானதாகும். இக்கல்வெட்டை ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.