உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன் உக்ரைனில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. மாணவர் நவீனின் குடும்பத்திற்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.






உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தி வருகிறது. இன்று 6வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கார்கிவ் பகுதியில் இன்று காலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வந்த மாணவர் நவீன் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். இதனை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.






அவரது குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அழைத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார். ரஷ்ய தாக்குதல் வலுவடைந்துள்ளது. அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உக்ரைன் எல்லைக்குள் சுமார் 64 கி.மீ தூரத்திற்கு ரஷ்யப் படைகள் அணிவகுத்து நிற்பதாக தகவல் வந்துள்ளது. இதனால் தாக்குதல் இன்னும் வலுக்கும் என்றே தெரிகிறது.


உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


கார்கிவ் நகரில் ரயிலில் ஏறி காத்திருக்கும் இந்திய மாணவர்கள், ரயில் எப்போது கிளம்பும் எனத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.


இந்தச் சூழலில் ரஷ்யா, உக்ரைன் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.