லீவு விட்டாச்சு... இருந்தாலும் சீருடைகளுடன் மாணவ மாணவிகள் ஓரிடத்தில் கூடி இருந்ததை காண முடிந்தது. என்னவாக இருக்கும் என்று சென்று பார்த்த பிறகுதான் அங்கு அவர்கள் அனைவர் கையிலும் சிலம்பம் இருந்ததை பார்க்க முடிந்தது. சரி கோடை விடுமுறை நாட்களை செல்போன் கேம்ஸ், youtube ரீல்ஸ், டிவி என்றில்லாமல் தற்காப்பு கலையை பயில சிறுவர்கள் கூடியிருப்பதை காண மகிழ்ச்சியாக இருந்தது. சரி பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று எத்தனிக்கையில் தான் நம்மை ஆச்சரியப்படுத்தும் அந்த காட்சியை காண முடிந்தது. அங்கு ஒரு இளைஞர் மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுத்து கொண்டிருந்தார். இதில் என்ன ஆச்சரியம்! என்று கேட்கலாம். அவர் சிலம்பத்தை ஒற்றை கைகளால் மட்டுமே சுழட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அருகே சென்று பார்க்கவும் தான் தெரிந்தது அவருக்கு ஒற்றை கை இல்லை என்று. 




மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த 28 வயதான இளைஞர் விமல். சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத விதமாக ஒர் விபத்தில் தனது ஒற்றை கையை இழந்திருக்கிறார். இருந்தும் சற்றும் மனம் தளராத விமல் நேரத்தையும், நாட்களையும் வீணடிக்காமல் கிராமத்து சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கம்புச் சண்டை உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகளை இலவசமாக கற்று கொடுத்து கொண்டிருக்கிறார். கையை இழந்தாலும், சற்றும் மனம் தளர விடாமல், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருந்தார். தனது மூதாதையர்கள் விரும்பிய பண்டைய விளையாட்டு முறைகளை தேடித் தேடி கற்றுக் கொண்டார். தான் மட்டும் கற்றது அல்லாமல் மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணினார்.  பண்டைய வீர கலைகள் இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார். 




இவர் இந்த காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் பெரும்பாலான சிறுவர்கள் டிவி, செல்போன் ஆகியவற்றில் யூடுப், பப்ஜி கேம் என விளையாட்டுகளை விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பெரியளவில் பாதிகப்படுகின்றனர், கண் பார்வையும் பாதிப்படைகிறது. இதையும் தாண்டி உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இதனால் மாணவர்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல் நோய்கள் எளிதில் தொற்றி விடுகிறது. பாரதியார் சொன்னது போல காலை முழுவதும் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு என்பது தற்போது உள்ள மாணவர்கள்  விளையாடுவது குறைந்து விட்டது. டிவி, செல்போன் வந்ததிலிருந்து நமது பழமையான விளையாட்டுகளை மறந்து போய்விட்டோம். 




பெண்களுக்கு பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் இடத்திலும், தனியாக செல்லும் போது பாலியல் சீண்டல்களால் தைரியத்தை இழந்து உயிரிழப்பு சம்பவங்கள் கூட நடந்து வருகிறது. அதனை முன் வைத்தே சிலம்ப ஆசான் விமல் அதிகளவில் பெண் குழந்தைகளுக்கு இந்த தற்காப்பு கலையை கற்று கொடுத்து அவர்களுக்கு துணிச்சலை உருவாக்கி வருகிறார். மேலும், மாணவர்கள் இல்லங்களுக்கு சென்று  இலவசமாக பண்டைய விளையாட்டு முறைகளை எடுத்துக்கூறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் விமல். மாணவர்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் அவர்களுக்கு ஆரோக்கியம் உடல் வலிமை எதிர்ப்புசக்தியை உயர்த்தும் விதமாக  மாணவர்களை தேடி அழைத்து வந்து தங்கியிருக்கும் இடத்தில் அருகாமையிலேயே விளையாட்டு மைதானத்தை உருவாக்கி, அதில் பண்டைய விளையாட்டு முறைகளை கற்றுக்கொடுத்து வருகின்றார். 




சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், அகனி, புத்தூர், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பண்டையகால வீர விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சிலம்பக்கலையில் அடிப்படையான குரங்குப் பாய்ச்சல், குத்துவரிசை, புலிவரிசை, அடிமுறை சிலம்பம், போர் சிலம்பம், அலங்கார சிலம்பம், மான்கொம்பு, சுருள், வாள் வீச்சு, வாள் கேடயம் போன்ற பல்வேறு பாரம்பரியக் கலைகள் அனைத்தையும் இலவசமாக கற்றுத் தருகிறார் மாற்றுத்திறனாளியான விமல். அதுமட்டுமின்றி தானும் பல போட்டிகளில் வெற்றி கோப்பைகள், பதக்கங்களை குவித்து வருவதை போன்று தன்னிடம் பயிலும் மாணவர்களையும் மாவட்ட, மாநில அளவில் பங்கேற்க செய்து பல வெற்றிகளை பெற செய்கிறார்.




மேலும், தற்போது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அரசாணை பிறப்பித்துள்ளது. இருப்பினும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிலம்பம் கலையை கற்றுதரும் விதமாகவும், விளையாட்டில் பழமையான கலைகளின் அழிவை தடுக்கும் விதமாகவும் பாடத்தில் இணைத்து, வேலை வாய்ப்பை தந்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்கை தரத்தை உயர்த்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கையை இழந்த பிறகும் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடன் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் தைரியமாக உழைத்து வாழ கற்றுத்தரும் விமல் நாம் அனைவரும் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டிய சாதனையாளரே... மேலும் இவரது  உழைப்பு பெரும் வெற்றியடைய இந்த மே தின நாளில் அவரை பாராட்டுவது மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் கூறி கொள்வோம். ஏனெனில் மே 1  இவருக்கு பிறந்த நாள்.