கூட்டுறவு வங்கி மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு!
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க மாநிலத் தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இளங்கோவன் உள்ளார். அதிமுகவின் ஜெ பேரவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார் இளங்கோவன். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கியவர். அவரது வலது கரம் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. வருமானத்துக்கு அதிகமாக 131% அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி,விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்நிலையில் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி வகிக்காத ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இப்போது சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எம்.எல்.ஏ., அமைச்சர் என இருந்த காலத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு வலதுகரமாக இருந்தவர் ஆத்தூர் இளங்கோவன் எனச் சொல்லப்படுகிறது. பழனிசாமியின் நம்பிக்கைக்கு உரிய நபர் என்பதால் அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் கலந்து ஆலோசிக்கப்படும் நபராகவே இருந்துள்ளார் இளங்கோவன். நிச்சயம் இளங்கோவன் மக்களவைத் தேர்தல் மூலமாக பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் சத்தமே இல்லாமல் 2019ம் ஆண்டு ஒரு பதவியில் சென்று அமர்ந்தார் இளங்கோவன். அதுதான் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க மாநிலத் தலைவர் பதவி. அது வெறும் பதவியாக அவருக்கு கொடுக்கப்படவில்லை. அது ஒரு தேர்தல் வியூகமாகவே அந்த பதவி கொடுக்கப்பட்டது எனக் கூறுகிறது சேலத்தின் அரசியல் வட்டாரம்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 மணி நேரத்திற்கும் மேலாக 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியுள்ளது. மேலும், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 மணி நேரம் நடந்த சோதனையில் பாதுகாப்பு பெட்டக சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர். இதேபோல மதுக்கரை பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சண்முகராஜா இல்லத்தில் நடந்த 7 மணி நேர கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்றிதழ் வழங்கிச் சென்றனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில் ரொக்கமாக ரூ.23,85,700 பணமும், 4.8 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 2.17 கோடி ஆகும்.மேலும், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள் மற்றும் சொத்து பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டது. அது தொடர்பாக ரூ.23, 82,700 பணமும், ஹார்டு டிஸ்குகளும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்துள்ளனர்
முன்னதாக,2016-21 வரையிலான ஐந்து ஆண்டு காலகட்டத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திட்டமிட்டு வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், விஜயபாஸ்கர் முதல் குற்றவாளியாகவும், அவரின் ரம்யா இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.