தமிழ்நாட்டில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், ஷோ ரூம்கள் என எங்கு சென்றாலும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை கால் கடுக்க நின்றுகொண்டே நாம் கேட்பவற்றை முகம் சுளிக்காமல் எடுத்துக் கொடுத்து, நம்முடன் புன்னகையுடன் வியாபாரம் செய்வதைப் பார்க்க முடியும். நாள் முழுவதும் கால் கடுக்க நின்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆசுவாசமாக வந்துள்ளது புதிய சட்டத் திருத்தம் ஒன்று. 


இதுகுறித்து ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தில் இயக்குநர் வசந்த பாலன் காட்சிகள் அமைத்திருப்பார். ஜவுளிக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவல நிலையை உலகிற்கு உணர்த்தியது அந்தத் திரைப்படம். 


தமிழ்நாட்டின் கடைகளிலும் வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உட்காரும் உரிமையைச் சட்டமாக மாற்றி அமல்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தச் சட்டத் திருத்தத்திற்கான முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பெரிதும் பயன்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



தொழிலாளார் நலத்துறை மற்றும் திறன் வளர்ச்சித்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்த சட்ட வரைவு மூலம், 1947ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, கடைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தங்கள் ஊழியர்கள் அமர இருக்கை அளிக்குமாறு கட்டாயமாக்கப்படும். 


22ஏ என்ற பிரிவில் சேர்க்கப்படவுள்ள இந்தச் சட்டத் திருத்ததில், `அனைத்து நிறுவனங்களின் வளாகங்களிலும் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு ஏற்றவாறு இருக்கைகள் போடப்பட வேண்டும். இதன் மூலம், ஊழியர்கள் தங்கள் பணியின் போது அமர்ந்து கொள்வதற்கும், பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது தவிர்க்கப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்தச் சட்டத் திருத்தத்தின் முன்வரைவில், தமிழ்நாடு முழுவதும் கடைகளிலும் வணிக நிறுவனங்களிலும் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் தங்கள் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பதால் அவர்களுக்குப் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 


`பணி நேரம் முழுவதும் நிற்க வைக்கப்பட்டு, சிரமத்திற்கு உள்ளாகும் பணியாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்களுக்கு அமர்வதற்கான வசதிகளைச் செய்துதர வேண்டியதைக் கட்டாயமாக்க வேண்டும்’ எனவும் இதில் கூறப்பட்டுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 4 அன்று, தமிழ்நாடு மாநிலத் தொழிலாளர் அறிவுரைக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட சந்திப்பு ஒன்றில், பணியாளர்களுக்கு அமர்வதற்கான இருக்கையைக் கட்டாயமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் இந்தச் சட்டம் அமலாவதற்காக ஒருமித்தமாக முடிவு செய்துள்ளனர். 



’அங்காடித் தெரு’ திரைப்படம்


 


இந்தச் சட்டதிருத்தத்தை வரவேற்றுள்ள ’அங்காடித் தெரு’ படத்தின் இயக்குநர் வசந்த பாலன், தனது பேஸ்புக் பக்கத்தில், “தமிழக அரசுக்கு நன்றி.என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன் உங்களுக்கு நினைவிருக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார். 


சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் ஜவுளிக் கடைகளில் பணியாற்றுவோர் `உட்காருவதற்கான உரிமை’ என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் நடத்தியதும், அதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு கேரள மாநில அரசு கேரளா கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கைகளைக் கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.