Pa. Ranjith: பாஜகவை ஒருபோதும் எங்கள் பகுதியில் வரவிடமாட்டோம் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


ஆம்ஸ்ட்ராங்க் நினைவேந்தல் பேரணி:


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி கூலிப்படை கும்பலால் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நேற்று ஆம்ஸ்ட்ராகின் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.


திருமாவளவனை எதிராக திருப்பிவிடுகிறார்கள் - பா. ரஞ்சித்


நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், “நாம் ஏதாவது பேசினாலே அதை பற்றி ஏதாவது கதைகளை கட்டிவிட்டு, நமது அண்ணன்களையே நமக்கு எதிராக நிறுத்துவது மிகவும் கவலைக்குரியது. அண்ணன் திருமாவளவனுக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டியது, உங்களுக்கு எதிராக நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம். உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? எங்களுடையே குரலே நீங்கள் தான். உங்களை ஒருகாலமும் நாங்கள் விட்டுவிடமாட்டோம். உங்கள் கூடவே நிற்போம்.


ஒன்றுபட வேண்டும் - பா. ரஞ்சித்: 


நமக்கு பல தலைமைகள் தேவைப்படுகிறது. பல விஷயங்களில் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஒரு குரலாக இருந்து மட்டும் நம்மால் சாதித்து விட முடியாது. பல குரல்களாக இருக்க வேண்டும். அந்த குரல்கள் இறுதியில் அதிகாரத்திற்கு எதிராக சென்று நிற்கிறது. அந்த சூழலில் நாம் அனைவரும் சேர்ந்து நிற்க வேண்டிய தேவை உள்ளது. எனவே எந்த காலத்திலும் அண்ணன் திருமாவளவன் கவலை படும் அளவிற்கு விட்டுவிட மாட்டோம்.  நமக்குள்ளே கட்சிகள், கொள்கைகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், நமது மக்கள் பாதிக்கப்படும் போது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டியுள்ளது.



பிரித்தாளும் சூழ்ச்சி - பா. ரஞ்சித்:


இங்கு இருக்கும் அரசியல் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. ஏற்கனவே பட்டியலினத்தில் உள்ள மூன்று வலுவான சமூகங்களை தனித்தனியாக பிரித்துவிட்டனர். அவர்களை பிரித்தது யார்? 80,90-களில் ஆரம்பித்த கட்சிகளில் அனைத்து தரப்பினரும் இருந்தனர். ஆனால் இன்று ஏன் இல்லை? தனித்தனி கொள்கைகளால் நாம் பிரிக்கப்பட்டு நமது ஒற்றுமை சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, பிரச்னையின் போதாவது நாம் ஒன்றுபட வேண்டியுள்ளது. 


திமுகவும், அதிமுகவும் என்ன செய்தது? - பா. ரஞ்சித்:


எப்போது பார்த்தாலும் பாஜக, பாஜக என்கிறார்கள். பாஜகவிற்கு எதிரானாவர்கள் நாங்கள். அவர்களின் அடிப்படையான ஆர்எஸ்எஸிற்கு எதிராக உதித்தவர் அம்பேத்கர். பாஜக ஒருகாலமும் எங்கள் பகுதியில் வராது. வரவும் விடமாட்டோம். ஆணவ கொலைகள் பற்றி பேசினாலே, திமுகவிற்கு எதிராக மட்டுமே பேசுவதாக கூறுகின்றனர். ஆனால், நாங்கள் இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிக்கும் எதிராக பேசுகிறோம். எல்லா கட்சிகளும் எங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் அதுதான் உண்மை. அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுக்கும் தான் மாறி மாறி வாக்களித்து இருக்கிறோம். ஆனால், நீங்கள் எங்களுக்காக என்ன செய்தீர்கள்? 


எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை:


இடஒதுக்கீடு முறையில் வாய்ப்பை பெற்று எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆனவர்கள் ஒருநாளும் எங்கள் பிரச்னைகளை பற்றி பேசவே இல்லை. எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோருகிறோம். இதன்பிறகு தலித் மக்களுக்கு ஏதேனும் நடந்தால், ஆதிதிராவிட நல அமைச்சர், இடஒதுக்கீடு மூலம் தேர்வான எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் மேயர் வந்து பார்க்காவிட்டால் சும்மா விடமாட்டோம். முற்றுகை போராட்டம் நடக்கும்” என இயக்குனர் பா. ரஞ்சித் பேசினார்.