Ayodhya Flight Service: ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகருக்கு, தேவைக்கு ஏற்ப விமான சேவை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில்:


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கடந்த 23ம் தேதி முதல் பொதுமக்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய முனைப்பு காட்டுகின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் ராமர் கோயிலுக்கு செல்ல திட்டமிடுகின்றனர்.


சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை:


அயோத்தி நகருக்கு செல்ல விரும்பும் பொதுமக்களின் வசதிக்கேற்ப, தற்போது நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான விமான டிக்கெட் முன்பதிவை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் நாள் ஒன்றிற்கு சென்னையில் இருந்து அயோத்திக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து அயோத்திக்கு பகல் 12:40-க்கு புறப்படும் விமானம் மாலை 3:15-க்கு சென்றடையும். அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 7:20-க்கு சென்னை வந்து சேரும். இந்த விமான சேவைக்கு ரூ.6,499 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்தின் 7 நாட்களும் இந்த சேவை தொடரும். இதனிடையே, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெப்பூர், பாட்னா, தர்பங்கா,  உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இந்த இரு வழி விமான சேவைகள மத்திய விமானப் போக்குவரத்து  அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, நாளை (பிப்ரவரி 1) தொடங்கி வைக்கிறார்.


வர்த்தக நகரமாகும் அயோத்யா:


ராமர் கோயிலை காண ஏராளமான பக்தர்களுடன், அயோத்தி நகருக்கான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அப்பகுதி சுற்றுலா பகுதியாக மாற்றம் காண்பதோடு, வர்த்தக நகரமாகவும் உருவெடுக்கும் என நம்பப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டே, அயோத்யா நகரில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி வைத்தார். டெல்லி மற்றும் அகமதாபாதிலிருந்து புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களுக்கும்,  ஜெய்பூர், பாட்னா, தர்பங்கா மற்ரும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து வாரத்துக்கு 4 நாட்களுக்கும் அயோத்திக்கு இருவழி விமான சேவை இயக்கப்பட உள்ளது.