"மானியம் அல்லது சிறப்பு விலையில் டீசல் தேவை" - மத்திய பெட்ரோலியத் துறைக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்!
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையும் சூழலில் டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் படகுகளுக்கு சிறப்பு விலையிலோ மானியத்திலோ தர மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி: மீன்பிடித் தடைக்காலம் நிறைவடையும் சூழலில் டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் படகுகளுக்கு சிறப்பு விலையிலோ மானியத்திலோ தர மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைய உள்ள சூழலில், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில், படகுகளுக்கு சிறப்பு விலையிலோ அல்லது மானியத்திலோ டீசல் வழங்கக் கோரி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலத்தைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. புதுச்சேரியில் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் வரும் ஜூன் 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில், நாடு முழுவதும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடிதத்தில் முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
வாழ்வாதாரம் பாதிப்பு: புதுச்சேரியின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக கடல் மீன்பிடித் தொழில் விளங்குகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களின் பங்கு: புதுச்சேரியில் சுமார் 450 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் உள்ளன. இந்த படகுகளின் எரிபொருள் தேவையை புதுச்சேரி மாநில மீனவர் கூட்டுறவு சங்கம் பூர்த்தி செய்கிறது. இச்சங்கம் புதுச்சேரி தேங்காய்த்திட்டு மற்றும் ஏனாம் சாவித்திரி நகர் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் பிரத்யேக டீசல் விற்பனை நிலையங்களை இயக்கி, ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் லிட்டர் டீசலை விநியோகம் செய்கிறது.
விலை வேறுபாடு அதிகரிப்பு: மீனவர்களின் இன்னல்களைக் குறைக்க, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) சில்லறை விற்பனை நிலையங்களுக்கு இணையான விலையில் டீசல் வழங்கும் சிறப்பு ஏற்பாட்டைச் செய்திருந்தது. இது மார்ச் 2026 வரை அமலில் இருந்தது. ஆனால், சமீபத்திய டீசல் விலை திருத்தத்திற்குப் பிறகு, மொத்த நுகர்வோர் விலைகளுக்கும் (Bulk Consumer Prices) சில்லறை விற்பனை நிலைய விலைகளுக்கும் (Retail Prices) இடையிலான வேறுபாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
முதல்வரின் கோரிக்கை:
"மீன்பிடிச் செலவினங்களில் எரிபொருளே மிகப்பெரிய அங்கமாக உள்ளது. தற்போதைய விலை வேறுபாடு காரணமாக, இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்கான செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. ஏற்ற இறக்கமான மீன்பிடி அளவு மற்றும் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகளால் ஏற்கனவே மீனவர்களின் லாபம் குறைந்துள்ள நிலையில், இந்த கூடுதல் சுமை அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
எனவே, மீனவர் கூட்டுறவு கூட்டமைப்பிற்கு தற்போதைய சில்லறை விற்பனை நிலைய விலைகளுக்குச் சமமான விலையில் டீசல் வழங்க வேண்டும். அல்லது பொருத்தமான சிறப்பு விலை நிர்ணய முறை அல்லது மானிய ஏற்பாட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்." மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லத் தயாராகி வரும் நிலையில், புதுச்சேரி முதல்வரின் இந்தக் கடிதம் மத்திய அரசின் கவனத்திற்குப் கொண்டு செல்லப்பட்டுள்ளது
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















