தமிழகத்திலேயே ஆட்சியாளர்களிடம் தான் மனிதாபிமானம் இல்ல, அரசு ஊழியர்களிடமும் இல்லையா. இந்த கொடூர செயல் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வெளியே தான். ரயில் நிலைய வளாகத்தில் ஆதரவற்ற இந்த முதியவரை அடிக்கிறார்கள்" என்ற கேப்ஷனுடன் காக்கி உடை அணிந்திருக்கும் ஒருவர் முதியவரை தாக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் காணொலி:


இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மே 9ஆம் தேதி ஈடிவி பார்த் தமிழ்நாடு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "விருதுநகர் ரயில் நிலையம் முன்பு முதியவர் ஒருவர் படுத்து இருந்துள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.


ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், அம்முதியவரை அங்கிருந்து செல்லுமாறு கம்பால் தாக்கும் காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


இது குறித்து விருதுநகர் கூரைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (60) என்பவர், ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரன் மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மற்றும் காணொலியின் அடிப்படையில், காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. இச்செய்தியை அதே தேதியில் குமுதம் ரிப்போர்ட்டர் ஊடகம் தனது யூடியூப் சேனலில் காணொலியாக வெளியிட்டுள்ளது.


 



மேலும், GowriSankarD_ (Archive) என்பவர் இப்பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு மதுரை கோட்ட ரயில்வேயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "இந்த சம்பவத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சம்பந்தப்பட்டுள்ளார், ரயில்வே ஊழியர் அல்ல.


விருதுநகர் மேற்கு காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மீது ஐபிசி 294(பி) மற்றும் 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (குற்றம் எண். 95/24) செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 






பரவும் செய்தி உண்மையா?


நம் தேடலில் முடிவாக விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் என்று வைரலாகும் காணொலி தவறானது என்றும் முதியவரை தாக்குபவர் ஆட்டோ ஓட்டுனர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.