பாஜக எம்.எல்.ஏ. இரண்டு பேர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், தலைமை இசைவு தெரிவித்தால் தூக்கிவிடுவோம் என்றும் திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார்


திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை நேற்று நேரில் சந்தித்த சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்.


அங்கீகாரம் வேண்டும்..


சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று வந்த சூர்யா சிவா, பாஜக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார் அண்ணாமலை. பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய சூர்யா சிவா, ''தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் கட்சியாக வளர்ந்து வருகிறது. அதனால் நான் பாஜகவின் இணைந்தேன். திமுகவில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அதேபோல் குடும்ப ரீதியாகவும் எனக்கு சிக்கல்கள் உள்ளன. எனவே உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் சேர்ந்துள்ளேன். திமுகவின் உட்கட்சி கடுமையாக உள்ளது. என் தந்தையே என்னை அங்கீகரிக்கவில்லை. அண்ணாமலை என்ன ஏற்றுக்கொண்டார். விரைவில் திமுகவே பாஜக பக்கம் வரும்” என்றார்.


இந்நிலையில் ஒரு முக்கிய எம்பியான திருச்சி சிவாவின் மகனே பாஜகவில் இணைந்தது குறித்து பாஜக கட்சியினர் கடுமையான பதிவுகளின் மூலம் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி ட்வீட் செய்துள்ளார்


செந்தில்குமார் ட்வீட்..


இதுகுறித்து ட்வீட் செய்துள்ள செந்தில்குமார், ''திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 






தற்போது தமிழகத்தில் வானதி சீனிவாசன், சரஸ்வதி, நயினார் நாகேந்திரன், காந்தி ஆகிய 4 பேர் மட்டுமே பாஜக எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இந்த 4 பேரில் யாரைக்குறிப்பிட்டார் எம்பி செந்தில் என இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.