மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல்:
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக, மூன்று இளைஞர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு கால் துண்டிக்கப்பட்டது. இதில் இரண்டு பேர் பட்டியல் சமூகத்தை சார்ந்த ஜீவா(17), தமிழ்செல்வன்(17) என்பதும் மற்றொருவர் சசிதரன்(17) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விபத்தில் சந்தேகம்:
இந்த சம்பவம் நடைபெற்று பத்து நாட்கள் கழித்து ஜீவா, தமிழ்செல்வன், சசிதரன் மூன்று பேரும், காதல் விவகாரத்தில் ஒரு கும்பல் தாக்கியதாகவும், இதில் ஜீவாவை 4 பேர் சாலையோரம் இருந்து மறைவான பகுதிக்கு எடுத்துச் சென்று கடுமையாக தாக்கி காலை வெட்டி துண்டித்துதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த மூன்று இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை, காவல்துறை உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள் உள்ளிட்ட தலித் அமைப்புகள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் படுகாயமடைந்த மூவரில் இருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக, வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனால் இது விபத்து வழக்கு என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜீவா கருத்து:
ஆனால் கால் துண்டிக்கப்பட்ட ஜீவா தெரிவித்துள்ளதாவது, நாங்கள் மூவரும் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்றோம். அங்கே தமிழ்ச்செல்வன் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அதனை கண்டு அவரது உறவினர்கள் துரத்தி வந்தனர். அப்பொழுது கீழே விழுந்த எங்களை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. தன்னை மட்டும் பயங்கரமாக தாக்கி காலை வெட்டி துண்டித்தனர் என தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில் 3 இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் அமைப்பு, இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட காவல்துறை பட்டியல் சமூக இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும், படுகாயமடைந்த இளைஞர்களை உரிய முறையில் விசாரணை நடத்த மறுப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கை:
பட்டியல் சமூக இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய வேண்டும். இந்த படுகாயமடைந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தினர். இதன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் வரை சென்று நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.