இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன்னில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார் முத்துராமலிங்க தேவர். “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த அவர் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். 


பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் வரும் நிலையில் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை ஆகியவை நடைபெறும். அவர் பிறந்த பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முக்குலத்தோர் சமுதாய மக்கள் தங்கள் குலதெய்வ கோயிலாக கருதி வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் பசும்பொன்னுக்கு வருகை தருவார்கள். 


அதன்படி இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் இருக்கும் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதிமுக பொதுச் செயலாளர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.






இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் தேவர் ஜெயந்தி முன்னிட்டு, “தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று. சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.






அதேபோல், ஓ பன்னீர்செல்வம் கோரிப்பாளையத்தில் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுதினார்.






பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கிய தேசபக்தரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை அனுப்பியவருமான வீரதிருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை இன்று. இந்நாளில் அவரது நினைவை போற்றி வணங்குகிறேன் ” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.