செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பவனி என்ற பெண் தோழி மற்றும் சையது, அமீர், ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் யாஷிகா. பின்பு பாண்டிச்சேரியிலிருந்து  தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக  சென்னை நோக்கி வந்துள்ளார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சூளேரிக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், நடிகையின் பெண் தோழியான பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த பவனி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன




உயிரிழந்த யாஷிகா தோழி பவனி. 28 வயதான பவனி, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். சார்ப்ட்வேர் பொறியாளரான பவனி அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்தியா திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த பவனி, தோழி யாஷிகாவை பார்க்க சென்னை வந்துள்ளார். யாஷிகாவின் வீட்டில் தங்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னை காண வந்ததால் யாஷிகாவும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டிக்கு சென்று திரும்பும் போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. முன்னதாக, யாஷிகாவின் தோழி குறித்து பேசிய யாஷிகாவின் தாய், எப்போது பவனி சென்னை வந்தாலும் எங்கள் வீட்டில் தான் தங்குவார். தோழி இறந்த விவகாரம் யாஷிகாவுக்கு இதுவரை தெரியாது. உண்மை தெரிந்தால் ரத்த அழுத்தம் ஏற்படும். அதனால் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் போகலாம் என்பதால் உண்மையை கூற வேண்டாமென மருத்துவர்கள் கூறிவிட்டனர் என தெரிவித்தார். யாஷிகா தோழி பவனியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், யாஷிகா விரைவில் குணமடைய வேண்டுமென்றும் பதிவிட்டு வருகின்றனர்.




முன்னதாக, சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் போட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தோழிவை மகிழ்விக்க யாஷிகா ஏற்பாடு செய்த பார்ட்டியே, அவரது உயிரை பறித்தது கொடுமை. அந்த விசயம் கூட இன்னும் யாஷிகாவிற்கு தெரியாது என்பது அதை விட கொடுமை!