பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “கேட்ட நிதியை வாங்கி தரமுடியவில்லை. தனியார் பள்ளி நடத்துபவர்கள் சட்டவிரோதமாகவா நடத்துகிறார்கள்? தனியார் பள்ளி நடத்துபவர்கள் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்றே நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் இலவச உணவு கொடுக்கிறார்களா? இலவச சீருடை கொடுக்கிறார்களா?  மும்மொழிக்கொள்கை என்பது அரசு பள்ளியோடு தொடர்புடையது.


அண்ணாமலை எங்கள் வீட்டில் சுவரொட்டிகள் ஒட்டுவதாக சொல்லிருயிருந்தார். முடிந்தால் பாஜக தலைவருக்கு தைரியமிருந்தால் அறிவாலயத்துக்கு அல்ல; அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள். நிதியை பெற்றுத்தர துப்பில்லாதவர்கள் சவால் விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை” என சாடியுள்ளார்.


மேலும் பேசிய அவர், “வாரணாசியில் மாற்றுத்திறனாளி தமிழகர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். கும்ப மேளா கூட்ட நெரிசலை சரியாக கையாளத் தெரியவில்லை. அதனால் ரயில்களில் கூட்ட நேரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை விமானம் மூலம் மீட்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இன்று இரவு சென்னை வந்துவிடுவார்கள்.” எனத் தெரிவித்தார். 


முன்னதாக மும்மொழிக்கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியுள்ளது. 


தமிழகத்தில் மொழி குறித்த விவாதம் தீயாய் வெடித்து வருகிறது. மும்மொழிக்கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய உதயநிதி “உங்க அப்பன் வீட்டு காசு கேக்கல. மாணவர்களின் பெற்றோர் கட்டிய வரி பணத்தை தான் கேட்கிறோம். 


முன்பாவது மோடி வந்தால் கோ பேக் மோடி என்று தான் மக்கள் சொன்னார்கள். இப்போது வந்தால் கெட் அவுட் மோடி என சொல்வார்கள்” என பேசினார். 


இதையடுத்து நேற்று கரூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி சொல்கிறார் மோடி வந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்வாராம். அதாவது வெளிய போடா மோடி என்று சொல்வாராம். நீ முடிந்தால் சொல்லிப்பாருடா. 


நான் துணை முதலமைச்சர், என் அப்பா சிட்டிங் முதலமைச்சர், என் தாத்தா 5 முறை முதலமைச்சர். இருக்கட்டும் நீ சொல்லிப்பாரு. தமிழக மக்களுக்காக பிரதமர் நிதி ஒதுக்கிறார். அவரே தமிழ்நாட்டுக்கு வந்தால் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். இந்தி பேசுவதே கிடையாது. அவரே இந்தி பேசாத போது நாம இந்தி பேசணும்னு ஏன் சொல்லப்போறார். 


அவர் மூன்றாவது இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார். அவரு ஒரு குஜராத்தி. அவருக்கு அந்த மொழி தெரியும். ஆங்கிலம் கற்றுக்கொண்டு பேசுகிறார். இந்தி மொழி நன்றாகவே கற்று வைத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வந்தால் திக்கி திணறி கொஞ்சம் கொஞ்சம் பேசுகிறார். செம்மையான மொழியில் பேச முடியவில்லை மன்னித்து விடுங்கள் என கேட்கிறார்” எனப் பேசியிருந்தார்.