Ajith Kumar: தமிழ்நாட்டை பெருமையடையச் செய்துள்ள அஜித்... பாராட்டித் தள்ளிய உதயநிதி ஸ்டாலின்!
அஜித்குமார் ஐரோப்பாவில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான அஜித்குமார் தற்போது கார்பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளில் நடக்கும் கார்பந்தயங்களில் அசத்தி வருகிறார்.
கார் பந்தயத்தில் கலக்கும் அஜித்:
ஐரோப்பாவில் நடைபெற்ற கிரென்டிக் 24 எச் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியது. அஜித்குமார் அணி பங்கேற்கும் கார் பந்தயங்களில் அனைத்தும் போடியத்தில் இடம்பிடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழக மக்களுக்கும் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதையடுத்து, அஜித்குமாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்குமாருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அஜித்திற்கு வாழ்த்து கூறிய உதயநிதி:
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும் அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) October 5, 2025
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும்… pic.twitter.com/zzleaHeYbV
தமிழ்நாடு அரசின் முத்திரை:
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.
'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்குமார் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் ஆவார். தமிழ்நாட்டில் விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரே நடிகர் அஜித்குமார் மட்டுமே ஆவார். அரசியலில் எக்காலத்திற்கும் தான் வரப்போவதில்லை என்று அஜித் திட்டவட்டமாக அறிவித்திருந்தாலும், அவரது ரசிகர்களின் வாக்குகளை கவர கடந்த பல வருடங்களாகவே ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திமுக - தவெக:
குறிப்பாக, விஜய் அரசியல் களத்திற்கு வந்த பிறகு திரையுலகில் விஜய்க்கு நேரடி போட்டியாளராக கருதப்படும் அஜித்தின் ரசிகர்களின் வாக்குகளை கவர தவெக முயற்சித்து வருகிறது. பொது இடங்களில் அஜித் - விஜய் இருவரும் இணைந்து இருப்பது போல இருக்கும் புகைப்படங்களும், பேனர்களும் தவெக-வினரால் வைக்கப்படுவதே இதற்கு சான்றாகும். அதேபோல, மற்ற கட்சியினரும் அஜித் ரசிகர்களைப் பெற முயற்சித்து வருகின்றனர்.
கரூர் சம்பவத்தில் விஜய் மீதும் தவெக மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையிலும், தவெக-வையும், விஜய்யையும் திமுக கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.





















