Dengue Special Camp: தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு தற்போது பெரிய சவாலாக மாறியுள்ளது டெங்கு காய்ச்சல். சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிநிதி என்ற சிறுமி, சென்னை மதுரவாயலைச் சேர்ந்த ரக்‌ஷன் என்ற 4வது குழந்தை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


அதேபோல் நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க அமைச்சர் மா. சுப்ரமணியன் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம் இன்று அதாவது அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு முகாம்கள் வடகிழக்கு பருவமழை முடியும் வரை நடத்தப்படும் என அமைச்சர் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 


இந்த சிறப்பு முகாம்கள் அரசு மருத்துவமனைக் கல்லூரி வளாகங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைங்கள் என 1000 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.  அமைச்சர் மா. சுப்ரமணியன் சென்னை மயிலாப்பூரில் உள்ள சீனிவாசபுரத்தில் சிறப்பு முகாமை துவக்கி வைக்கிறார். 


தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்புகளை கண்காணிக்க 9 சிறப்பு அதிகாரிகளை சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களுக்கு மொத்தம் 9 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்திருந்தார். 


இதுதொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள சுகாதார மாவட்டங்களின் விபரம் இதோ, 


கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமாரி, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக வடிவேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


செய்யாறு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு டெங்கு பரவல் கண்காணிப்பு அதிகாரியாக சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். 


அதேபோல், திருவள்ளூர், பூவிருந்தவல்லி, தென்காசி மற்றும் சிவகாசி சுகாதார மாவட்டங்களுக்கு டெங்கு பரவல் கண்கானிப்பு அதிகாரியாக கிருஷ்ணராஜ் நியமனம். 


விழுப்புரம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் திருச்சி ஆகிய சுகாதாரத்துறை மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரியாக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 


சேலம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட டெங்கு கண்காணிப்பு அதிகாரியாக ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.