தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அரசியல் ரீதியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இவருடன் பஞ்சாப் மாநில முதலமைச்சரான பகவந்த் மானும் உள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சந்தில் திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர். பாலு மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.  


எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே உச்சக்கட்ட அதிகார போட்டி நிலவி வருவதை பார்க்க முடிகிறது. இதில், டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. 


டெல்லி அவசர சட்ட விவகாரம்:


இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது. 


இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு, இந்த அவசர சட்டம் மாநில அரசின் அதிகாரத்தினை குறைப்பதாக உள்ளது. 


எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வரும் கெஜ்ரிவால்:


இந்த விவகாரத்தில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வரும்போது, எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களை கட்சி பாகுபாடின்றி வருகிறது. 


இந்த சந்திப்புக்கு முன்னர், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ஆலோசனையும் மேற்கொண்டார். ஏற்கனவே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு:


அடுத்ததாக, தெலங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவை கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கெஜ்ரிவால்  இன்று அதாவது ஜூன் 1ஆம் தேதி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மாநிலங்களவையில் அவசர சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க ஆதரவு கோரியுள்ளார். 


இதுகுறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான ஜனநாயக விரோத ‘டெல்லி எதிர்ப்பு’ அவசரச் சட்டத்துக்கு எதிராக திமுகவின் ஆதரவைக் கோருவதற்காக இன்று(ஜூன் 1ஆம் தேதி) சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை ஸ்டாலினை சந்திக்க உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.