வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால், தமிழகத்தில் மழை குறைந்து படிப்படியாக இயல்புநிலை திரும்பியது.
இதனிடையே, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அதன், காரணமாக இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது 24 மணி நேரத்தில், தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடிமின்னலுடன் ,கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை பரவலாகவும், குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்ளில் கனமழையும் பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு பொழியலாம் என, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.