பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அதிலும் வார விடுமுறையோடு சேர்த்து கூடுதலாக விடுமுறை வந்தால் கேட்கவா வேண்டும், வெளியூர்களுக்கு சுற்றுலாவிற்கு பறந்து விடுவார்கள். அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். அந்த வகையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு  விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடிய நிலையில், டிசம்பர் மாதம் மத்தியில் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மீண்டும் விடுமுறையானது மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

Continues below advertisement


நாகையில் உள்ளூர் விடுமுறை


அந்த வகையில் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாகூர் கந்தூரி விழா நாகை மாவட்டத்தில் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொடியேற்றத்துடன் விழாவானது தற்போது தொடங்கியுள்ளது. கொடி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். இதனையடுத்து நாகூர் அலங்கார வாசலில் கொடி ஊர்வலம் நிறைவடைந்து சிறப்புத் தொழுகைக்குப் பின்பு  தர்காவின் 5  கோபுரங்களிலும் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.


 



நாகூர் கந்தூரி திருவிழா


இதில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வு வருகின்ற 30ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும் டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமாக மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனையடுத்து நாகை மாவட்டத்தில் டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவையொட்டி வரும் டிசம்பர் 1ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 13ஆம் தேதி பணி நாளாக கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலங்கள் செயல்படும் என ஆட்சியர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.